1341. பொன்நா யகனும் புரந்தரனும்
பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த
மின்னார் பொன்னம் பலநடுவே
விளங்கும் கருணை விழிவழங்கும்
அன்னார் அறிவா னந்தநடம்
ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன்
என்நா யகனார் அவர்கழலை
இன்னும் ஒருகால் காண்பேனோ.
உரை: திருமகள் கணவனான திருமாலும் இந்திரனும் பிரமனும் புகழ்ந்து துதிக்க ஒளிவிளங்கும் பொன்னம்பலத்தின்கண் திகழ்கின்ற விழியருள் நல்கும் அவ்வியல்புடன் ஞானவின்பத் திருக்கூத்தாடும் திருவடியைக் கண்ணாரக் கண்டு மனம் குளிர்ந்த யான் எனக்குத் தலைவராகிய அவருடைய திருவடியை இன்னும் ஒருமுறை காணப் பெறுவேனோ? எ.று.
பொன் - திருமகள். புரந்தரன் - இந்திரன். பூவாழ்பவன் - பூவில் இருக்கும் பிரமன். பொன் வேய்ந்தமை பற்றித் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம்பலம் எனப்படுகிறது. கூத்தப் பெருமானைத் “தூய செம்பொன்னினால், எழுதி வேய்ந்த சிற்றம்பலக் கூத்தன்” (குறுந்.) என நாவுக்கரசர் போற்றுவது காண்க. தில்லையம்பலம் பொன்வேய்ந்தது பல்லவ வேந்தருள் இரணியவர்மன் காலம் போலும். கண்களால் அருணோக்கம் புரியும் நலம் பற்றி, “கருணை விழி வழங்கும் அன்னார்” எனப் போற்றுகிறார். சிவஞான வின்பம் பயக்கும் திருக்கூத்தை “அறிவானந்த நடம்” எனவும், அதனை யாடி யருளும் திருவடியில் கழல் ஒலிக்க அணிந்திருப்பது பற்றி, “ஆடும் கழல் கண்டு அகம் குளிர்ந்தேன்” எனவும் மகிழ்கின்றார். “ஆளவுடைக் கழற் சிற்றம்பலத்தரன் ஆடல் கண்டால் பீளையுடைக் கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்ப தென்னே” (நேரிசை.) என்று பெரியோர் கூறுவர். திருவடியைக் கண்ட கண் அவற்றையே காண விழையும் என்பார், “என்னாயகனார் அவர் கழலை இன்னும் ஒருகாற் காண்பேனோ” என்று உரைக்கின்றார்.
இதனால், திருவடிக் காட்சி நலம் கூறியவாறாம். (2)
|