1343.

     புன்கண் அகற்றும் மெய்யடியார்
          போற்றும் பொன்னம் பலநடுவே
     வன்கண் அறியார் திருநடஞ்செய்
          வரதர் அமுதத் திருமுகத்தை
     முன்கண் உலகில் சிறியேன்செய்
          முழுமா தவத்தால் கண்டேன்நான்
     என்கண் அனையார் அவர்முகத்தை
          இன்னும் ஒருகால் காண்பேனோ.

உரை:

      தம்மைப் பற்றிய புல்லிய குற்றங்களை அடிமைப் பணியால் நீக்கிக் கொள்ளும் மெய்ம்மை யடியார்கள் பராவுகின்ற பொன்னம் பலத்தின்கண் நடுநின்று வன்கண்மை யென்பதைச் சிறிதும் கொண்டறியாத திருக்கூத்தை யாடுகின்ற அருளாளனாகிய சிவபெருமானுடைய இன்பவமுதம் ஒழுகும் திருமுகத்தை, உலகில் முன்பு செய்த பெரிய தவப் பயனாற் சிறியனாகிய யான் கண்டு மகிழ்ந்தேன்; என் கண் போன்ற அப்பெருமானின் திருமுகத்தை இன்னும் ஒருமுறை காண்பேனோ? எ.று.

     உயிரைப் பற்றும் சிறு குற்றங்கள் இறைவனை நோக்கிச் செய்யும் அடிமைத் தொண்டுகளால் நீங்கும் என்பதுபற்றி, “புன்கண் அகற்றும் மெய்யடியார்” என உரைக்கின்றார். அவர்கள் மெய்த்தொண்டு புரிவதுடன், அன்புடன் பரவிப் பணிவது பொன்னம்பலம் என்றற்கு, “மெய்யடியார் போற்றும் பொன்னம்பலம்” எனப் புகல்கின்றார். அம்பலத்தின்கண் கூத்தியற்றுமிடம் நடுவிடமாதலின், “நடு” விதந்தோதப்படுகிறது. வன்கண்மை - அருளின்மை; இரக்கமின்மையுமாம். அருளே சிவனுக்குத் திருவுருவாதலால், “வன்கணறியார்” எனக் கூறுகின்றார். வரதர் - வரம் தருபவர்; அருளாள ரென்றுமாம். காண்பார்க்கு வற்றாத இன்ப மருளுதலின், அமுதத் “திருமுகம்” என்று பாராட்டுகின்றார். முன்கண் - முற்காலம். அம்பலத்தாடும் பெருமானுடைய அருளொழுகும் திருமுகத்தைக் காண்பதென்பது முன்னைத் தவமுடையார்க்கே இயலுவதென அறிஞர் கூறுதலால், “முன்கண் உலகிற் சிறியேன்செய் முழு மாதவத்தால் கண்டேன்” என மொழிகின்றார். தவப் பயனாகக் கண்ட அம்பலவாணன் திருமுகத்தை மனமாரக் காணா தொழிந்தமையால், மேலும் காண்டற்கு ஆசை மேலிடுகிற தென்பாராய், “என்கண் அனையார் அவர் முகத்தை இன்னும் ஒருகாற் காண்பேனோ” எனக் கவல்கின்றார்.

     இதனால், திருமுகம் காண்டற் குளதாகிய ஆர்வ மிகுதி விளம்பியவாறாம்.

     (4)