1344.

     அன்புற் றடியார் தொழுதேத்த
          அணியார் மணிப்பொன் அம்பலத்தே
     வன்புற் றழியாப் பெருங்கருணை
          மலையார் தலையார் மாலையினார்
     மன்புற் றரவார் கச்சிடையின்
          வயங்க நடஞ்செய் வதுகண்டேன்
     இன்புற் றடியேன் அவர்நடத்தை
          இன்னும் ஒருகால் காண்பேனோ.

உரை:

      அன்பு மிகுந்து அடியராயினார் தொழுதும் பணிந்தும் ஏத்துகின்ற அழகிய மணியிழைத்த பொன்னம் பலத்தின்கண் வன்மையால் அழிதலில்லாத பெரிய அருளாகிய மலைபோன்றவரும், தலைமாலையைத் தோளில் அணிந்தவருமாகிய கூத்தப் பெருமான் நிலையான பெருமைபடைத்த பாம்பாலாகிய கச்சினை இடையில் விளங்க இறுகக் கட்டிக்கொண்டு கூத்தாடுவது கண்டு இன்புற்றேன்; அந்த இன்பத்தை மேலும் பெறுதற்கு அவருடைய திருநடனத்தை இன்னும் ஒருகாற் காணலாகுமோ? எ.று.

     அடியராயினார்க்கு இன்பம் ஊறிய வண்ணமிருத்தலால் அன்பு பெருகுதல் தோன்ற, “அன்புற்று அடியார் தொழுதேத்த” எனப் புகல்கின்றார். தொழுதல் - கை குவித்தல், “தொழக் கை யமைத்தேன்” (பொன்வண்) எனச் சேரமான் பெருமாள் கூறுவ தறிக. மணி யிழைத்த அம்பலமாதல் பற்றி “மணிப் பொன்னம்பலம்” எனப்படுகிறது. வன் புற்றமையால் அழியா மலை என இயைக்க. கருணைக்குப் பெருமை அழியாமை என வுணர்க. தலைமாலையை, தலையார் மாலை யென்று சிறப்பிக்கின்றார். “தலை மாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேரும் தலைவனைத் தலையே நீ வணங்காய்” (அங்க) என நாவுக்கரசர் நவில்வதும் காண்க. பாம்புகள் புற்றில் வாழ்வனவாதலின், “மன்புற்றரவு” என்கின்றார். பாம்பையே இடையிற் றோலாடையை இறுகப் பிணித்துக் கட்டற்குக் கொண்டது விளங்க, “அரவார் கச்சு இடையின் வயங்க நடஞ் செய்வது கண்டேன்” என்று கூறுகிறார். பாம்பாலாகிய கச்சின் அழகே தம்மை இன்புறுத்திய தென்பாராய்,. நாவுக்கரசர் “பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி உந்தியின்மேல் அசைந்த கச்சின் அழகு கண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே” (திருவிருத்) எனப்பாடுவது காண்க. அரவுக் கச்சணிந்து அம்பலத்தில் சிவனாடிய நடனம் காணக் காண ஆர்வம் மிகுவிக்கின்ற தென்றற்கு, “இன்புற் றடியேன் அவர் நடத்தை இன்னும் ஒருகாற் காண்பேனோ” என மகிழ்ந்துரைக்கின்றார்.

     இதனால், கச்சணிந்த நடனம் காண ஆசை மிக்கது தெரிவித்தவாறாம்.

     (5)