1346.

     சிறியேன் தவமோ எனைஈன்றாள்
          செய்த தவமோ யான்அறியேன்
     மறியேர் கரத்தார் அம்பலத்தே
          வாழும் சிவனார் தமைக்கண்டேன்
     பிறியேன் எனினும் பிரிந்தேன்நான்
          பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ்
     எறியேன் அந்தோ அவர்தம்மை
          இன்னும் ஒருகால் காண்பேனோ.

உரை:

      சிறுமை யுடையவனாகிய எனது தவப் பயனோ, என்னை ஈன்று வளர்த்த தாயார் செய்த தவத்தின் பயனோ, மானை யேந்திய கையை யுடையவரும், அம்பலத்தின்கண் எழுந்தருள்பவருமாகிய சிவபெருமானைக் கண்டு இன்புற்றேன்; கண்டவிடத்து அவரினின்றும் பிரிந்து வருதற்கில்லே னாயினும் பிரிந்து மண்ணிற் பிறந்து பேயாய் அலைந் தொழிந்தேன்; பிரிந்து போதற்கேதுவாகிய வினையைப் போக்குகில்லேன்; அவரை இன்னும் ஒருகாற் காண்பேனாயின் வினையாகிய தடை நீங்கிப் பிரியாப் பெருநிலை பெறுவேன். எ.று.

               எனது சிற்றறிவும் சிறு செயலும் நோக்க, என்னைத் தவமுடையேன் என எண்ணற்கு வாய்ப்பில்லை யென்பார், “சிறியேன் தவமோ” என ஐயுறுகின்றார். எனக்கு இந்த நல்லருட் பேறு வாய்த்தற்கு, என்னைப் பெற்ற தாய் செய்த தவத்தின் விளைவாகலாம் என எண்ணற் கிடமுண்டெனினும், என்னால் உண்மை துணிய இயலவில்லை யென்றற்கு, “எனையீன்றாள் செய்த தவமோ யானறியேன்” என்கின்றார். எவ்வகைத் தவத்தாலோ தில்லைப் பொன்னம்பலத் தாடுகின்ற சிவபரம் பொருளைக் கண்ணாரக் காணும் பேறுபெற்றேன் என மகிழ்கின்றாராதலால், “அம்பலத்தே வாழும் சிவனார் தமைக் கண்டேன்” என வுரைக்கின்றார். பிரியேன் எனற் பாலது எதுகை நயம் நோக்கிப் “பிறியேன்” என வந்தது. சிவபரம் பொருளைக் காண்பவரும் சேர்பவரும் மீளப் பிரிந்து பிறவார் என்பதுபற்றிப் “பிறியேன் எனினும்” என்று கூறுகின்றார். “மேவினார் பிரிய மாட்டா விமலனார்” (கண்ணப்ப) என்று சேக்கிழார் பெருமான் உரைப்பர். தாம் பிரிந்ததற்குக் காரணம் பேய்த் தன்மையால் விளைவித்துக் கொண்ட வினை யென்பாராய், “பிரிந்தேன் நான் பேயேன்” என்றும், பிரிதற்குக் காரணமாயிருந்த வினையைப் போக்க மாட்டாதவனாயினேன் என்றற்குப் “பிரிவினைக் கீழ் எறியேன் அந்தோ” என்றும் வருந்துகின்றார். பிரிவினை - பிரிதற்கு ஏதுவாகிய வினை. கீழ் எறிதல் - பயனின்றிக் கெட ஒழித்தல். வினை கெடினும் கெடா தொழியினும் கூத்தப் பெருமானை மீள மீளக் காண்டற் கெழுந்த ஆசை பெருகியவண்ண முளது என்பார். “அவர் தம்மைப் பின்னும் ஒருகாற் காணேனோ” என்று இரங்குகின்றார்.

     இதனால், வினை தம்மைப் பிரிப்பினும் பிரியாப் பேராசை யுண்மை எடுத்துரைத்தவாறாம்.

     (7)