1349.

     பொன்என் றுரைக்கும் அம்பலத்தே
          புனித னார்தம் அழகியலை
     உன்என் றுரைப்பேன் என்னேஎன்
          உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை
     மின்என் றுரைக்கும் படிமூன்று
          விளக்கும் மழுங்கும் எனில்அடியேன்
     என்என் றுரைப்பேன் அவர்அழகை
          இன்னும் ஒருகால் காண்பேனா.

உரை:

     பொன்னம்பலம் என்று புகழ்ந்தோதப்படும் திருவம்பலத்தின்கண் தூயனாகிய சிவபெருமானுடைய அழகியலை உன்னுக வென்று என் நெஞ்சிற் குரைப்பேன்; என் நெஞ்சு அதன் நன்மையைச் சிறிதும் உணரவில்லை; என்னே அதன் இயல்பு; மின்னினமாய் ஒளிசெய்வன வெனப்படும் சூரியன், திங்கள், நெருப்பு என்ற மூன்றும் ஒளி மாழ்கி மழுங்குமென்றால், அப்பெருமான் மேனி வனப்பை என்னென்றுரைப்பேன்? இன்னு மொருமுறை காணப் பெறுவேனோ? எ.று.

      பொன்னினாலாகிய கோபுரத்துடன் விளங்குதலால் பொற்குன்றம் எனப்படுவது பற்றி, பொன்னம்பலத்தை, “பொன்னென் றுரைக்கும் அம்பலம்” என்று சான்றோரால் கூறப்படுகிற தென அறிக. பொன்னம் பலத்தில் எழுந்தருளும் கூத்தப் பெருமான் தூய்மையின் வடிவினனாதல் விளங்கப் “புனிதனார்” என்று புகழ்கின்றார். பொன்னம்பலத்தின் நடுவில் பொன்னிற மேனியுடன் நின்றாடும் அவனது பேரழகு உள்ளத்தின் எல்லைக் கடங்காது மிக்கு, எண்ணாமல் உள்ளத்திற் கொண்டு நோக்குக என்று வள்ளலார் தமது மனத்தைப் பணிக்கின்றார். அடங்காமையினால் அஃது அவல மெய்துகிறது; அது கண்டு, “புனிதனார் தம் அழகியலை யுன்னென் றுரைப்பேன் என்னேயென் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை” என வுரைக்கின்றார். அழகியல் - அழகின் நலம்; அழகையும் இயலையும் எனினும் அமையும். வான மின்னுக்களின் இனமாய், மூவுலகுக்கும் ஒளி செய்வனவாகிய ஞாயிறு திங்கள் நெருப்பு ஆகிய மூன்றன் ஒளியும் அப்பெருமான் அழகொளியின் எதிரில் ஒளி மழுங்கும் எனில், வேறு கூறுவது மிகை யென்பார், “மின்னென் றுரைக்கும் படி மூன்றின் விளக்கும் மழுங்குமெனில் அடியேன் என்னென் றுரைப்பேன் அவர் அழகை” எனப் பராவுகின்றார். விளக்கு - ஞாயிறு முதலிய மூன்று.

     இதனால், கூத்தப்பெருமானது அழகியலை ஆர்வ மிக எடுத்தோதியவாறாம்

     (10)