135.

    சந்தை நேர்நடை தன்னி லேங்குவேன்
        சாமிநின் திருத்தாளுக் கன்பிலேன்
    எந்தைநீ மகிழ்ந் தென்னை யாள்வையேல்
        என்னை யன்பர்கள் என் சொல்வார்களோ
    நிந்தை யேற்பினும் கருணை செய்திடல்
        நித்த நின்னரு ணீதியாகுமால்
    தந்தை தாயென வந்து சீர்தரும்
        தலைவனே திருத்தணிகை நாதனே.

உரை:

     அடியவர்கள் முன் தந்தையும் தாயும் போல வந்து சீர் செய்யும் தலைவனே, தணிகை நாதனே, ஆரவாரம் பொருந்திய உலக வாழ்வில் வருந்துகின்ற யான் சாமியாகிய உன் திருவடிக்கண் அன்பில்லாதவனாக வுள்ளேன்; எந்தையாகிய நீ மன மகிழ்ந்து ஆட் கொள்வாயாயின், வரக் கூடிய குற்றம் யாதாகும்? நினக்கு அன்பராயினார் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்; அன்பில்லாத கீழ் மகனுக்கும் அருள் புரிகின்றாய் என்று உன்னைக் கூறுபவாயினும், நித்தனாகிய நினது திருவருளை நீ தடையின்றி நல்குவது அருளாளனாகிய உனக்கு அறமாகும், எ. று.

     சந்தை - பொருளும் தெளிவு மில்லாத ஆரவாரம். ஆரவாரத்துடன் கூடுவதும் பிரிவதுமுடைய சந்தைக் கூட்டம் போல உலக வாழ்வும் அமைந்திருப்பது தோன்ற அதனைச் “சந்தை நேர்நடை” என்று குறிக்கின்றார். சந்தையிற் கூட்டம் கூடிப் பொருள்களை வாங்குவதும் விற்பதும் போல, வாழ்க்கையில் வினைசெய்தலும் பயனுகர்தலும் கண்டு இவ்வாறு கூறுகின்றா ரெனினும் அமையும். இவ்வாரவாரத்தில் இடையீறில் பற்றுக் கோடின்றி வாழ்க்கைத் துன்பங்களால் அலைப்புண்டு தனித்துத் துயருறுமாறு விளங்கச் “சந்தை நேர்நடை தன்னில் ஏங்குவேன்” என்றும், முருகன் திருவடியை யுணர்ந்து அன்பாற் பற்றி நிற்கும் திண்மை எனக்கு இல்லை என்பாராய்ச் “சாமி நின் திருத் தாளுக்கு அன்பிலேன்” என்றும் இயம்புகின்றார். என்னுடைய ஏக்கத்தையும் வலி யின்மையும் பார்த்தருளித் திருவுள்ளம் உவந்து அருள் புரிந்தால் அன்பர் குழாத்தினர் ஒன்றும் குறை கூற மாட்டார்கள் என்பாராய், “எந்தை நீ மகிழ்ந்து என்னை யாள்வையே அன்பர்கள் என்சொல் வார்கள்” எனவும், அன்பில்லாத குறை கண்டும் அருள்புரிவதால் குற்ற மொன்றும் உண்டாகா தென்பார், “என்னை யாள்வையேல் என்னை?” எனவும் கூறுகின்றார். அப்படியே ஒரு குறை கூறப் படினும் அதனை மதியாது அருள் புரிவது நினக்கு அறமும் முறையுமாகும் என வற்புறுத்துபவர், “நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல் நின் அருள் நீதியாகுமால்” எனவும் உரைக்கின்றார். நினது அருளாட்சியில் நின்பால் அன்புடையாரே யன்றி அன்பில்லாரும் திருவருள் பெறுகின்றன ரென்ற குறிப்புப் புலப்பட, “அருணீதி யாகுமால்” எனக் குறிக்கின்றார். நித்தன்-என்றும் உள்ளவன். தந்தை போல் அறிவு நடையும் தாய் போல உடல் நலமும் அருளுதலால் முருகனைத் “தந்தை தாயென வந்து சீர்தரும் தலைவனே” என்று பரவுகின்றார்.

     இதனால் அன்பில்லார்க்கு அருள் வழங்குவதால் இகழ்ச்சி யுண்டாமாயினும், மனமுவந்து அருளுவது நலமே விளைவிக்கும் என்று தெரிவித்துக் கொண்டவாறாம்.

     (5)