71. முத்தி யுபாயம்

திருவொற்றியூர்

   

    முத்தி உபாயம் என்பது முத்தி பெறுதற்கு அமைந்த உளவு இஃது என உரைக்கும் பகுதியாகும். முத்தி என்பது உடம்பொடு கூடி உலகிற் பிறப்பதும் இறப்பதும் செய்து அலமரும் உயிர் அறவினை செய்து மேலுலகு சென்று மீள மண்ணுலகில் பிறந்துழலுவதும், தீவினை செய்து கீழுலகு சென்று மீள மண்ணுலகில் தோன்றி வருந்துவதும் இல்லாத பிறவாப் பெருநிலை. இம்மையாகிய மண்ணக வாழ்வும், மறுமையாகிய அமர வாழ்வும் மீளப் பிறந்து துன்புறுதற்கு ஏதுவாதலின், பத்தி நெறிகண்ட சான்றோர் முத்திநெறியை வற்புறுத்தினர். வேத வேள்விகளும் தான வகைகளும் இம்மை மறுமைகளை யன்றி முத்தியை நோக்குவன அல்லவாதலின், அவற்றை விலக்கி முத்தி யுபாயமே சான்றோர்களால் சைவத் திருமுறைகளிலும் சிவாகமங்களிலும் வற்புறுத்தப்பட்டது. அது பற்றியே வடலூர்ப் பெருமான் இங்கே அதனை எடுத்து மொழிகின்றார்.

    அதற்கு ஏற்ற செய்யுள் வகை இசைத்தமிழ் நெறியில் திருவிருக்குக் குறள் என ஒன்று அமைந்து உலவுகிறது. இசைத்தமிழ் நூல்கள் இறந்து பட்டமையின், இருக்குக் குறள் போன்றவற்றிற்கு இலக்கணம் காண்பது அரிதாயிற்று. இருக்குக் குறளை வஞ்சிப்பாவினத்துள் வைத்து ஆராயலாம்; ஆயினும் அப்பிரிவும் சைவத் திருமுறைகட்குப் பின்னே பல்லாண்டு கழிந்தபின் சயின முனிவர்களால் புதிது காணப்பட்ட தென்பதை மனதிற் கொள்ளல் வேண்டும். மேலும், வடலூர் வள்ளல், முத்தியுபாயத் தலைப்பில் பாடியருளும் வஞ்சித்துறைப் பத்துப் பாட்டும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. திருமுறையிற் காணப்படும் திருவிருக்குக் குறட்பாக்கள் அந்தாதித் தொடை பெறாமை நோக்கத் தக்கது.

    திருவிருக்குக் குறள் வகை வடலூர் வள்ளலுக்கு வழி காட்டியாய் முத்திக்கு உபாயம் உரைக்கும் முறையில் இருப்பது அறிஞர் கண்டு அறியத்தக்கது:

                “சித்தம் தெளிவீர்கள்
                அத்தன் ஆரூரைப்
                பத்திமலர்தூவ
                முத்தி யாகுமே”

என்றும்,

                “துன்பம் துடைப்பீர்காள்
                அன்பன் அணியாரூர்
                நன் பொன்மலர் தூவ
                இன்பம் ஆகுமே”

என்றும் வரும் திருவிருக்குக் குறட்பாக்களின் இசையும் அமைப்பும் பொருளும் ஈண்டு நினைவுகூரத் தகுவனவாம்.

இவற்றின் சீர் எண்ணியும் எழுத்தெண்ணியும் ஞானப்பொருள் நயம் காண்பது உண்டு.

வஞ்சித்துறை

1350.

     ஒற்றி ஊரனைப்
          பற்றி நெஞ்சமே
     நிற்றி நீ அருள்
          பெற்றி சேரவே.

உரை:

      இறைவன் திருவருளாகிய முத்தி சேர வேண்டுவையேல் அது தூரத்தில் இல்லை; அதன்பால் நீ அன்பு செய்வாயாயின், அம் முத்தி நிலை தானாகவே வந்து உன்னைச் சாரும் காண். எ.று. முதற் றிருப்பாட்டில் முத்திநிலையை அருட்பெற்றி என்றாராகலின் ஈண்டு அதனை வருவிக்கின்றார். முன்னைப் பாட்டின் அந்தத்தில் நின்ற 'சேர' என்ற சொல் இப்பாட்டின் ஆதியாய் நின்று இயைத்தலால் அருட் பெற்றியாகிய திருவருள் முத்திநிலை வருவிக்கப்பட்டது. நெடுந் தூரத்தில் உள்ளது போலும் முத்திநிலை என எண்ணி அயராமைப் பொருட்டு, “தூரம் அன்றுகாண்” என்று நெஞ்சிற்கு அறிவுறுத்து ஊக்குகின்றார். மிக அணிமையிற் பெறற் கெளிதாயது என்றற்கு “வாரம் வைத்தியேல் சாரும் முத்தியே” என்று உரைக்கின்றார். வாரமாவது அன்பு. சிவன்பால் அயரா அன்பு செய்யின் முத்தி இனிதின் எய்தும் என்ற கருத்துப் படவே, “வாரம் வைத்தியேல் சாரும் முத்தியே” என்கின்றார். “சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர் தாயேயாகி வளர்த்தனை போற்றி” என உரைத்து, அவ்வன்பரது அன்பு வலையில் அவனே அகப்பட்டு முத்தி தருவது இயல்பு என்பாராய்ப் “பத்தி வலையிற் படுவோன் காண்க” என மணிவாசகர் பகர்கின்றமை காண்க.

     இதனால், சிவன்பால் அன்பு வைப்பது முத்திப் பேற்றுக்கு உபாயமாதல் காணலாம்.

     (1)