1352.

     முத்தி வேண்டுமேல்
          பத்தி வேண்டுமால்
     சத்தி யம்இது
          புத்தி நெஞ்சமே.

உரை:

      நெஞ்சமே, முத்தியின்பம் வேண்டுமாயின் நாளும் பத்தி செய்ய வேண்டும்; நான் சொல்லும் இது முக்காலும் உண்மை; உனக்கு இஃது அறிவுரையாகும். எ.று.

          பிறப்பிறப்பில்லாத முத்திநிலை யென்பது என்றும் குன்றாத பொன்றாத இன்ப நிலையம் என்பர். தூய ஞானிகளாயினார் அனைவரும் அதனையே வேண்டி அதற்குரிய நேரிய நெறி யாதாமென ஆய்ந்தறிந்து, 'இறைவன் இன்ப வடிவினன்; அவனுறையும் சூழல் இன்பச் சூழல்; அதனை யடைவதுதான் உண்மைநெறி' என்று கண்டனர். இன்பச் சூழலையடைய முயல்பவர் இறைவன்பால் அயரா அன்பு செலுத்தக் கடவர். அன்பு செய்வதை வடமொழியில் பத்தி பண்ணுவதென்றலின் “முத்தி வேண்டுமேல் பத்தி வேண்டுமால்” என்று வள்ளற் பிரான் எடுத்து மொழிகின்றார். முத்தி வேண்டி நின்ற தம்மை இறைவன் ஆண்டு கொண்டு பத்தி நெறியிற் படிவித்தான் என்ற கருத்துப்பட, “முத்திக் குழன்று முனிவர் குழாம் நனிவாட, அத்திக் கருளி யடியேனை யாண்டு கொண்டு, பத்திக்கடலுட் பதித்த பரஞ்சோதி” (தெள்ளே) என்று வாதவூரடிகள் ஓதி யருளுகின்றார். இவ்வுரை உலகறிந்த உண்மையாதலால், “சத்தியம் இது” என்றும், இதனினும் சிறந்த ஞானோபதேசம் வேறின்மை பற்றி, “புத்தி நெஞ்சமே” என்றும் புகல்கின்றார்.

     இதனால், முத்தியின்பம் வேண்டுவோர் பத்தி செய்யக்கடவர் என்பது பெற்றாம்.

     (3)