1353. நெஞ்ச மேஇது
வஞ்ச மேஅல
பிஞ்ச கன்பதம்
தஞ்சம் என்பதே.
உரை: நெஞ்சமே, முத்திப் பேற்றுக்கென யாம் உரைக்கும் இவ்வுரை வஞ்சனையன்று; பிஞ்ஞகம் என்னும் தலைக் கோலத்தையுடைய சிவனது திருவடியே தஞ்சம்; இதுவே எல்லா ஞானிகளும் சிறப்பித்துக் கூறுவது. எ.று.
'இது' என்னும் சுட்டுப் பிஞ்சகன் பதம் தஞ்சம் என்ற கூற்றைக் குறிப்பது. செய்யுளாகலின் அச்சுட்டு முற்பட வந்தது. சமயவாதிகள் பலரும் “இதுவாகும் அது அல்ல” எனப் பிணங்கி வேறுபட்டு மொழிதலின் “சத்தியம் இது” என்றும், “வஞ்சமே பல” என்றும் அடுத்தடுத்துப் பன்னி யுரைக்கின்றார். பிஞ்ஞகம் என்பது சிவனுக்கேயுரிய தலைக்கோலங்களில் ஒன்று; அதனால் அவனைப் பிஞ்ஞகன் என்பதும் மரபு. பிஞ்ஞகன் என்ற தூய தமிழ்ச்சொல் பாமர மக்களிடையே பிஞ்சகன் என வழங்குவ துண்மையின் இவ்வாறு கூறினார். தஞ்சம் என்பது எண்மைப் பொருட் டென்பர் தொல்காப்பியர் (சொல். இடை. 18); ஈண்டுப் பற்றுக் கோடென்னும் பொருட்டென வுணர்க. “எமக்குன் திருவடியே தஞ்சம்” என்பது போல, என்பது என்று சிறப்பித்துக் கூறுவது.
இதனால், முத்தி நெறிக்கு இறைவன் திருவடியே தஞ்சமெனக் கொள்க என்றதாம். (4)
|