1354. என்ப தேற்றவன்
அன்ப தேற்றுநீ
வன்பு மாற்றுதி
இன்பம் ஊற்றவே.
உரை: எலும்பு மாலையணிந்த சிவபெருமான்பால் நீ அன்பு கொண்டு மனத்திற் படிந்திருக்கும் வன்புக் கொள்கையைப் போக்குவாயாக; இன்பம் வேரூன்றிப் பெருகுமாகலான். எ.று.
மாசங்கார காலத்தில் இறந்து பட்ட தேவர்களின் என்புகளை எடுத்து மாலையாகத் தொடுத்தணிந்து, ஏனை யாவரும் கெடினும் தான் கெடுதல் இல்லாத தன்மையன் என்ற உண்மையை உலகறியச் செய்ததுபற்றி, “என்பது ஏற்றவன்” என்று இசைக்கின்றார். “செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் (நாகைக் காரோ)” என்று சுந்தரர் பாடுவது காண்க. நிலையில் பொருள்மேற் செலுத்தும் அன்பினும் நிலைத்த பரம் பொருளாகிய சிவன்பாற் செலுத்தும் அன்பு சீரும் சிறப்பும் உடைய தென்பது பற்றி, “அன்ப தேற்றுக” என்றும், அந்த அன்பு நிலைபெற்றுச் சிவமாய் நலம் பயத்தலை விரும்புவை யாயின், அதற்கு மாறான வன்பு உணர்ச்சிக்கு மனத்தே இடந்தரலாகாது என்றற்கு, “நீ வன்பு மாற்றுதி” என வற்புறுத்துகின்றார். அன்புக்கு மறுதலையாய தீய பண்பனைத்தும் வன்பு எனப்படும். அவற்றுள் தலையாயவை இரக்கமின்மையும் கொடுமையுமாம். உண்மையன்பு சிவமாய் மாறி வற்றாத பேரின்பம் நல்கு மென்பது சைவ நூன் முடிபு. அன்பினை யேற்று வன்பினைப் போக்குக; அப்போதுதான் அன்பு சிவமாய்ப் பரிணமித்து இன்பம் பெருகுவிக்கும் என்றற்கு, “இன்பம் ஊற்றவே” என்று இயம்புகின்றார். ஊன்ற வென்பது எதுகை நோக்கி ஊற்ற என வலித்தது. இது வலிக்கும் வழி வலித்தில். வேரூன்றி நிலைபேறு கொண்டாலன்றி விளைவு இல்லாமை நோக்கி, அடிப்படையை விதந்து “ஊன்ற” என வலியுறுத்துகின்றார்.
இதனால், சிவம் நல்கும் இன்பம் வேண்டின் அதன்பால் அன்பு செய்க; அதற்கும் மறுதலையாய வன்பினைப் போக்குக; இதுவே முத்திப் பேற்றுக்கு உளவு என்பதாம். (5)
|