1355.

     ஊற்றம் உற்றுவெண்
          நீற்றன் ஒற்றியூர்
     போற்ற நீங்குமால்
          ஆற்ற நோய்களே.

உரை:

      வெண்மையான திருநீற்றையுடைய சிவபெருமான் எழுந்தருளும் திருவொற்றியூரை ஊன்றிய அன்பு மிகுந்து போற்றுவோமாயின் நோய்கள் அறவே நீங்கிவிடும். எ.று.

     “வெண்ணீறு செம்மேனி விரவினானை” (நரை) எனச் சான்றோர் கூறுதலின், “வெண்ணீற்றன்” என்ற பெயரையே பொறிக்கின்றார். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் குருவருள் பெறுதற்கு வாயிலென்பர் தாயுமானார். வெண்ணீற்றன் என்றதனால் மூர்த்தி கூறினமையின், ஒற்றியூர் என்று தலத்தைச் சிறப்பித்தார். மூர்த்தி முதலிய மூன்றும் போற்றி வழிபடப் பணித்தலின் “ஒற்றியூர் போற்ற” எனப் புகல்கின்றார், போற்றுவார்க்கு வேண்டுவது, உள்ளத்தே யுண்மையாக நிறைந்த அன்பு. இஃது இயற்கையிலேயே ஊறிப் பெருகும் இயல்பினதாகலின், அதனை “ஊற்றம்” எனக் குறித்து, ஊறும் அவ்வன்பு தானும் ஒரு படித்தாய் அமையாது, மேன்மேலும் பெருகுதல் வேண்டும் என்றற்கு “உற்று” எனச் சிறப்பிக்கின்றார். உற்று, மிகுதிப் பொருட்டாய உறு என்னும் சொல்லடியாகப் பிறந்த தெரிநிலை வினையெச்சம்; “துன்புறூஉம் துவ்வாமையில்லாகும்” (குறள்) என்றாற் போல, மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றும் முறையாக நோக்கிச் செல்பவர்க்கு உடலைப் பற்றித் தடை செய்வன நோய் வகையாதலின், அவற்றை நினைந்து “நோய்கள் ஆற்ற நீங்குமால்” என உரைக்கின்றார்.

     இதனால், அன்புமிக்கு ஒற்றியூரை யடைந்து போற்றினால் ஞான சாதனமாகிய உடலைப் பற்றி நின்று வருத்தும் நோய்கள் நீங்கிப் போம் என்பது கூறப்படுகிறது.

     (6)