1356. நோய்கள் கொண்டிடும்
பேய்கள் பற்பலர்
தூய்தன் ஒற்றியூர்க்
கேய்தல் இல்லையே.
உரை: நோய் கொண்டு வருந்தும் பேயர் பலர் தூயனாகிய சிவபெருமானுடைய திருவொற்றியூரைப் பொருந்துதல் இல்லை. எ.று.
தீய நினைவும் தீய சொல்லும் தீய செயலும் உடைய தீயவர்கள் பேயராய்ப் பல்வகை நோய் கொண்டு வருந்துவரென்று அறிந்தோர் உரைப்பர்; தாம் செய்த தீவினை காரணமாக நோயுற்று வருந்துபவர் மிகப் பலராயினும் ஆங்காங்கே கிடந்து வருந்துவது இயல்பு என்பது புலப்பட, “நோய்கள் கொண்டிடும் பேய்கள் பற்பலர்” என்று இசைக்கின்றார். தம்முடைய வினை யேதுவாகப் பேய்த்தன்மையுற்று வருந்துவதோடு, தம்மாற் காணப்பட்டாரையும் நோயுற்று வருந்தச் செய்வர் என்றற்கு, “நோய்கள் கொண்டு இடும் பேய்கள் பற்பலர்” என இகழ்ச்சி தோன்றக் கூறுகிறார். தாம் நோய் கொள்வதுடன் பிறருக்கும் நோயை இடுவது பேய்த்தன்மை என அறிக. நோய் செய்வதன்றிப் போக்கும் திறம் பேய்கட்கு இல்லையென அறிக. பேய்க் கூட்டத்தைத் தான் ஆட்டி வைப்பதன்றி அவற்றை நோய் செய்ய விடுவது சிவன்பால் இல்லை. பேய்க் கோட்பட்டவர் திருவொற்றியூர்க்குப் போதருவராயின், பேய்கள் அவரை விட்டு நீங்கியோடும்; பேய்களால் யாதொரு துன்பமும் உண்டாகாது என்றற்கு, “ஒற்றியூர்க்கு ஏய்தல் இல்லையே” என உரைக்கின்றார்.
இதனால், பேய்க் கோட்பட்டார் திருவொற்றியூர்க் கெய்திய வழி, அவரைப் பற்றிய பேய் நீங்கிவிடும்; அவரும் இனியராவர் என்பதாம். (7)
|