1357.

     இல்லை இல்லைகாண்
          ஒல்லை ஒற்றியூர்
     எல்லை சேரவே
          அல்லல் என்பதே.

உரை:

      விரைவில் நாம் திருவொற்றியூர் எல்லையை யடைவோமாயின், அல்லல் என்பதே நமக்கு இல்லையாம். எ.று. ஒல்லை - விரைவு. திருவொற்றியூரை நினைந்த மாத்திரையே சென்று சேர்வது சிறப்பு; சிறிது காலம் தாழ்க்கின் வேறு உலகியல் நினைவுகள் தோன்றி ஒற்றியூர்க்குச் செல்லும் நினைப்பை மாற்றிவிடும் என்பதற்காகவே, “ஒற்றியூர் ஒல்லை சேர்க” என்று உரைக்கின்றார். ஒற்றியூர் நினைவு, அங்குள்ள சிவபரம் பொருளின் நினைவாய் நெஞ்சகம் நிறைந்து, சிவமெழுந்தருளும் சிவமாநகர் என்ற எண்ணம் மேலிட்டுச் சிவஞானவின்பம் சிறத்தலால், ஒற்றியூர் எல்லை சேர்ந்த மாத்திரையே உலகியல் துன்ப நினைவுகள் நீங்குவது உண்மையாதல் பற்றி, “எல்லை சேரவே அல்லல் என்பதே இல்லை” என்று அறுதியிட்டுரைக்கிறார், அல்லல் - உலகியல் துன்பம். துன்பம் வந்தமிடத்து அறிவின்கண் ஒளி குன்றி இருள் பரந்து விடுதல் கண்டு, துன்பத்தை “அல்லல்” என்ற சொல்லால் குறிக்கின்றார். சிவஞான வொளியும் தெளிவும் சிந்தையிற் பரவி இன்பம் செய்வது விளங்க, “அல்லல் என்பதே இல்லை யில்லை” என்று அடுக்கியுரைக்கின்றார். காண்: முன்னிலை யசை.

     இதனால், ஒற்றியூரை நினைந்த விடத்து உடனே செல்க; சென்ற விடத்து அல்லல் இல்லையாம் என்பதாம்.

     (8)