1358. அல்லல் என்பதேன்
தொல்லை நெஞ்சமே
மல்லல் ஒற்றியூர்
எல்லை சென்றுமே.
உரை: பழமையான நெஞ்சமே, வளமிக்க திருவொற்றியூர் எல்லையை யடைந்தும் மனத்தே வருத்தம் எய்துவது ஏனோ, கூறுக. எ.று.
பிறக்கும்போது உடன் தோன்றி அறிவு வளர உடன் வளர்ந்து கேண்மை செய்வது பற்றி நெஞ்சினை, “தொல்லை நெஞ்சமே” என்று கூறுகின்றார். மல்லல் - வளம். கடலையும் சென்னைப் பெருநகரத்தையும் சேர இருத்தலின், வளம் பெருகுவது தோன்ற, “மல்லல் ஒற்றியூர்” என உரைக்கின்றார். ஒற்றியூர் எல்லையையடைந்தும், உலகியற்சூழலிற் பலகாலம் கிடந்து அழுக்கேறிய நெஞ்சின்கண் பழைய வாசனைகள் எழுந்து மனத் தெளிவை மாற்றிக் கலக்குதல் தோன்ற, அல்லல் என நினைந்து வருந்துவது கூடாது என்றற்கு, “ஒற்றியூர் எல்லை சென்றும் அல்லல் என்பது ஏன்” என வினவுகின்றார். ஒற்றியூர் அடைந்தும், உலகியற் பொருளை யுண்டு வளர்ந்த உடலொடு கூடியே இருத்தலின், அல்லலும் அவலமும் இயல்பாக வுளவாதலைக் குறிக்கும் நோக்கத்தால், இத் திருப்பாட்டை உரைக்கின்றார் போலும்.
இதனால், ஒற்றியூரை யடைந்த உள்ளம் சிவத்தோடொன்றாது உலகியல் அல்லலில் தோய்தல் கூடாதென்பது உணர்த்தியவாறு. (9)
|