1359. சென்று வாழ்த்துதி
நன்று நெஞ்சமே
என்றும் நல்வளம்
ஒன்றும் ஒற்றியே.
உரை: நெஞ்சமே, எப்பொழுதும் நல்ல வளம் பொருந்துகின்ற திருவொற்றியூர்க்குச் சென்று ஒற்றிப் பெருமானை வாழ்த்துக; அது நன்று. எ.று.
அறிவொடு கூடிச் செயற்படும் மக்கள் தம் நெஞ்சம் இணங்கினால் மேற்கொண்ட வினையைக் கடைபோகச் செய்வர்; பிணங்கினால் குறைபடச் செய்து குற்றப்படுவர். சிவஞானமும் தெளிந்த நிலையும் பெற்ற செவ்வியை யறிந்து நெஞ்சிற்கு அறிவுரைக்கும் வள்ளற் பெருமான் ஒற்றியூர்க்குச் சென்று சிவபெருமானை வாழ்த்துக எனப் பணிப்பவர், ஊர்க்கண் நிலவும் வாழ்க்கைச் சூழ்நிலை வளம்பொருந்தியிருப்பது கண்டு எப்போதும் இவ்வண்ணம் இருத்தல் வேண்டுமென விழையுமாறு விளங்க, “என்றும் நல்வளம் ஒன்றும் ஒற்றி” என்று இசைக்கின்றார். ஒற்றியூர்ப் பெருமானை வாழ்த்த வரும் பயன் யாது என ஆராய வேண்டா; நல்லன யாவும் உளவாம் என்றற்கு, “நன்று” எனச் சொல்லித் தெளிவிக்கின்றார்.
இதனால், திருவொற்றியூர் சென்று சிவபெருமானை வாழ்த்தினால் நல்லன எல்லாம் எய்தும் என்பதாம்.
(10)
|