136.

    செல்லும் வாழ்க்கையில் தியங்க விட்டுநின்
        செய்ய தாள்துதி செய்திடா துழல்
    கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டு செய்
        கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ
    சொல்லும் இன்பவான் சோதியே யருள்
        தோற்றமே சுகசொரூப வள்ளலே
    சல்லியங் கெட அருள் போரிவாழ்
        சாமியே திருத்தணிகை நாதனே.

உரை:

     துன்பம் நீங்குமாறு அருள் வழங்கும் திருப்போரூரில் எழுந்தருள்கின்ற சாமியே, திருத்தணிகை நாதனே, சான்றோர்கள் புகழும் இன்பம் நிறைந்த பெருஞ் சோதியானவனே, திருவருளே உருவாகிய பெருமானே, சுகமே, உண்மைச் சொரூபமாக அமைந்த அருள் வள்ளலே, கணந்தோறும் தேய்ந்து கெடும் உலக வாழ்க்கையில் என் மனக்கலக்க முறுமாறு விடுத்து நின் திருவடியைத் துதிக்காமல் திரிகின்ற கல்லும் புறங்காட்டித் தோற்குமாறு அமைந்து மாறுபட்டியலும் கள்ள மிக்க நெஞ்சினை யுடைய யான் எய்தியுள்ள கவலைகளைப் போக்கி யருள்வாயோ, கூறுக, எ. று.

     சல்லியம் - துன்பம். அடி பரவும் அன்பர்கட் குண்டாகும் துன்பங்கள் போரூர் சென்று பரவுமிடத்து இனிது தாமே கெடுகின்றன என நிலவும் சிறப்புப் பற்றிச் “சல்லியம் கெடவருள் செய் போரி” என்று புகழ்கின்றார். அணுவணுவாகச் செல்லும் நீர்ப்பெருக்குப் போலச் சிறு சிறு வினாடியாக வாழ்நாள் கழிதலால், “செல்லும் வாழ்க்கை” என்று சிறப்பித்துக் கூறுகின்றார். நில்லாது நீங்கிக் கழிந்த வண்ணமிருத்தலால் யாதொன்றும் நிலை பெறாமையால் மனத்தின்கண் அலைச்சல் தோன்றி அறிவை மயக்குவதால், “செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு” என்றும், நிலை பேறுடைய நயம் பயக்கும் முருகப் பெருமான் திருவடியை நினைத்தலின்றி வருந்துகிறேன் என்பார், “நின் செய்ய தாள் துதி செய்திடாதுழல்” கின்றேன் என்றும், இதற்குக் காரணம், குழைந்துருகி மென்மையும் அன்பும் எய்த மாட்டாது கருங்கல்லினும் வன்மை மிகவுறைத்து இகல் விளைக்கும் எண்ணங்களால் நிறைந்திருப்பதே யென்பாராய்க் “கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டு செய்” நெஞ்சினேன் என்றும், இவை தாமும் புறத்தே வெளிப்படாமல் நெஞ்சின் கண் மறைந்து கிடக்கின்றன என வுரைப்பாராய்க் “கள்ள நெஞ்சினேன்” என்றும் இயம்புகின்றார். இதனை யுணர்ந்து நின் திருவடியை அன்புடன் நினைந்து பரவுவதல்லது செயல் வேறில்லை யென நின் திரு முன்படைகின்றேன்; இனி யென் மனக்கவலை தீர்ப்பாயன்றோ என வேண்டலுற்றுக் “கவலை தீர்ப்பையோ” என முறையிடுகின்றார். “தனக்குவமை யில்லாதான் தாள் சேர்த்தார்க் கல்லால் மனக் கவலை மாற்ற லரிது” (குறள்) என்பது வள்ளலார்க்குத் துணையாவது காண்க.

     இதனால், வாழ்வின் நிலையாமையால் நிலை யிழந்து மனம் கல்போற் சமைந்து கள்ளம் நிறைந்து மிண்டுகின்ற எண்ணங்களால் இறைவன் திருவடியைத் தொழாதொழிந்த குற்றத்தை எடுத்தோதிக் கவலை களையுமாறு முறையிடுவதைக் காணலாம்.

     (6)