72. தவத்திறம் போற்றல்

திருவொற்றியூர்

   

    இப் பத்தின்கண் வடலூர் வள்ளற் பெருமான், திருவொற்றியூரில் தியாகேசர் திருக்கோயில் திருவிழாவில் திருவுலா (பவனி) வருவது காண்கின்றார். சிவபெருமானது உருவழகு வள்ளலாரின் உள்ளத்தைக் கவர்ந்துகொள்கிறது. சிவனடியே சிந்திக்கும் அவரது அறிவு, தெளிவுற்றுத் தியாகப்பெருமான் அருளிய திருவுலாக் காட்சியைக் காண்டற்கு ஏதுவாயிருந்த தமது தவம் யாதாகலாம் எனச் சிந்திக்கிறது. தவத்தையே மிகவும் நினைந்து நினைந்து வியக்கின்றார். “பவனியைக் கண்ட யான் பசி கண்டிலேன்; பிறவிப்பிணி கண்டிலேன் என்று பேசுகின்றார். அவரது அழகைக் கண்டேன்; அவனியிற் காணாதன எல்லாம் கண்டேன்; கல்லொத்த மனம் நெக்குருதி அளிந்த கனியாதலைக் கண்டேன்; எல்லையில்லாத ஆனந்தமும் களிப்பும் கொண்டேன்; யான் பெற்ற காட்சியை யாவர் பெறுவர்?” என வாய் வெருவுகின்றார். வினையும் என்னின் நீங்கிப் போகப் பார்க்கின்றேன்; இனி, இறப்பும் ஒழிந்தது. இந்நிலையை எய்துதற்கு என்ன தவம் செய்தேனோ என நினைக்கின்றார். பெண்மைத் தன்மை உடனெய்தவே நினைவு பெண்ணொருத்தி வருந்திக் கூறும் பாட்டாய் வெளிப்படுகிறது.

    தவத்திறம் போற்றலாவது, தாம் செய்த தவத்துள் இந்த நற்பயனைத் தந்தது எந்தத் தவம் என நினைந்து பரவுவது. தவமாவது பேச்சு, நடையில் விடாமுயற்சி எனப்படுவது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1360.

     வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி
          வேணிப் பெருமான் ஒற்றிநகர்
     செல்வப் பெருமான் சிவபெருமான்
          தியாகப் பெருமான் திருஅழகைக்
     கல்வைப் புடைய மனம்களிக்கக்
          கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்
     இல்வைப் புடையேன் அம்மாநான்
          என்ன தவந்தான் செய்தேனோ.

உரை:

      வில்வத் தழையும் பொன்னிறம் கொண்ட கொன்றைப் பூமாலையும் அணிகின்ற சடையை யுடைய பெருமானாகிய திருவொற்றியூர்க்கண் கோயில் கொண்டு உறையும் செல்வப் பெருமானும், சிவ பெருமானுமாகிய தியாகப் பெருமானுடைய சிறந்த அழகைக் கல்லைப் போன்ற என் மனம் மகிழவும் கண்கள் களிக்கவும் கண்டு நின்றாங்கு நின்றொழிந்தேன்; இல்லின்கண் இருத்தலை யுடையனாகிய நான் இந்தப் பேறு எய்துதற்கு என்ன தவம் செய்தேனோ, அறியேன். எ.று.

     சங்கச் சான்றோர் வில்லா (நற். 146) என வழங்குவது இங்கே வில்வம் எனப்படுகிறது. நாட்டவர் அனைவரும் இன்றும் வில்வமெனவே வழங்குகின்றனர். வில்வத் தழையும் கொன்றை மலரும் சிவபெருமானுக்கு விருப்பமானவை என்பர். கொன்றை மலர் பொன்னிறமுடைமையின், “பொன் கொன்றை” எனச் சிறப்பிக்கின்றார். வேணி - சடை. வேணிப் பெருமான், செல்வப் பெருமான், சிவபெருமான், தியாகப்பெருமான் என்பன வினை வேறுபடாப் பலபொரு ளொரு சொல். கல் போன்ற மனம், கல் வைப்புடைய மனம் என வந்தது. கண்ணும் மனமும் காணப்பட்ட அழகின்கண் ஒன்றினமையின், வேறிடம் பெயரமாட்டாது நின்றேன் என்பார், “கண்டு நின்றேன்” என்று கூறுகின்றார். இளநங்கை யொருத்தியின் கூற்றில் வைத்துரைத்தலின், “இல்வைப் புடையேன் அம்மா” என்று இயம்புகின்றார். பூப்பெய்திய மகளிரைப் புறம்போக விடாது இல்லிடத்தே செறித்து வைத்தல் பண்டை நாளைச் செல்வர் இயல்பு; அக் கருத்துப் புலப்படவே, “இல்வைப் புடையேன்” என்ற கூற்று வந்துளது. இற் செறிக்கப்பட்ட யான் காண்பது அரிதென்பாள் “என்ன தவந்தான் செய்தேனோ” எனக் கூறுகின்றாள்.

     இதனால், உலா வந்த தியாகப் பெருமான் அழகு கண்டு கண்ணும் மனமும் களிக்க நின்றயர்ந்தேன் என்பதாம்.

     (1)