1361. கூடும் படிமுன் திருமாலும்
கோல மாகிப் புவிஇடந்து
தேடும் திருத்தாள் சிவபெருமான்
தியாகப் பெருமான் திருப்பவனி
நாடும் புகழ்சேர் ஒற்றிநகர்
நாடிப் புகுந்து கண்டேனால்
ஈடும் அகன்றேன் அம்மாநான்
என்ன தவந்தான் செய்தேனோ.
உரை: கண்டு அடைதல் வேண்டி முன்பு ஒருகால் திருமாலும் பன்றி யுருக்கொண்டு மண்ணுலகைப் பிளந்து சென்று தேடிய திருவடியை யுடைய சிவபெருமானாகிய தியாகப் பெருமானது திருவுலாவை, யாவரும் விரும்பும் புகழ்பொருந்திய திருவொற்றியூரை நாடியடைந்து கண்டேனாக, மேனி மெலிந்து ஏனைப் பெண்களோடு சேர வைத்துப் பேசப்படும் எனது அழகை இழந்தேன்; என்றாலும், அப்பெருமான் அழகைக் கண்டு களித்தற்கு என்ன தவம் செய்தேனோ, அறியேன். எ.று.
இல்லின்கண் செறிப்புண் டுறையும் இளமகள் திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் வடிவழகு கேள்வியுற்று அவனைக் காண்டல் வேட்கை மீதூர்ந்து ஏங்கியிருக்கின்றபோது, பெருமான் திருவுலா வரும் செய்தி வருகிறது. ஒத்த மகளிர் போந்து உரைக்கின்றார்கள். அவருடன் சென்று கண்டவள் கூறும் முறையில் இப்பாட்டு அமைந்து உளது. சிவபெருமான் திருவடியைச் சென்றடைய விரும்பித் திருமால் பன்றி யுருக்கொண்டு சென்ற குறிப்பை, “கூடும்படி முன் திருமாலும் கோலமாகி” என்றும், சிவன் திருவடி காணமாட்டாதவாறு நிலத்திற் புதைந்திருந்தமை புலப்பட, “புவியிடந்து தேடும் திருத்தாள்” என்றும் கூறுகின்றாள். தன்னாற் காதலிக்கப்பட்ட சிவனுடைய திருவடிக்கு ஏற்றம் கூறுதலால், இவ்வாறு கூறுகின்றாள். அன்பு மிகுதி தோன்றச் “சிவபெருமான் தியாகப் பெருமான்” என அடுக்கி யுரைக்கின்றாள். காதலன்பு வெளிப்பட மொழிதலால், “திருப்பவனி” என்கின்றாள். ஒற்றி நகர்க்கண் பவனி வரும் இடம் நாடிச் சென்றமை புலப்பட “ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால்” என்றும், தியாகப்பெருமானது மேனியழகு கண்டதும் உள்ளத்தெழுந்த பெருவேட்கை ஏக்கத்தை விளைவிக்கவே மேனி மெலிந்து அழகு குன்றினமை புலப்பட, “ஈடும் அகன்றேன் அம்மா” என்றும் இயம்புகின்றார்.
இதன்கண், இறைவன் வடிவழகில் மனம் தோய்ந்த நங்கை நலமிழந்து ஈடு அகன்றமை கூறியவாறாம். (2)
|