1362. ஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த
ஆல காலம் அத்தனையும்
சேர்க்கும் களத்தான் சிவபெருமான்
தியாகப் பெருமான் திருநடத்தைக்
கார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க்
கண்டேன் பிறவி கண்டிலனே
யார்க்கென் றுரைப்பேன் அம்மாநான்
என்ன தவந்தான் செய்தேனோ.
உரை: முழங்குகின்ற கடலின்கண் அந்நாளில் எழுந்த ஆலகால விட மத்தனையும் கழுத்தின்கண் அடக்கிய சிவபெருமானாகிய தியாகப் பெருமான் செய்கின்ற திருக்கூத்தைக் கருமுகில் தவழும் சோலை சூழ்ந்த திருவொற்றியூர்க்குச் சென்று கண்டேன்; அதனால் இனிப் பிறிவி யில்லாமை காண்பேனாயினேன்; இதனை யாவர்க்குச் சொல்வேன்; அம்மா, நான் செய்த தவம் யாதோ? எ.று.
அலைகள் எழுந்து தம்மிற்றம் மோடும் கரையோடும் மோதிக் கொள்வதால் எழும் முழக்கம் பற்றி, “ஆர்க்கும் கடல்” என்றும், அமுதம் வேண்டித் தேவர்கள் கடல் கடைந்த காலத்தில் ஆலகால விடம் எழுந்தமையின், அதனை “அன்றெழுந்த ஆலகாலம்” என்றும், பெரிய கடலிடத்தில் தோன்றியது சிறிதாக இருத்தலாகாமையின், “ஆலகால மத்தனையும்” என்றும், கழுத்திலே இருத்திக் கொண்டமையின்,“சேர்க்கும் களத்தான் சிவபெருமான்” என்றும், தான் நஞ்சமுண்டு தேவர்க்கு அமுதத்தைத் தியாகம் செய்தமையின் “தியாகப் பெருமான்” என்றும் உரைக்கின்றார். சிவபெருமான் வீற்றிருக்கும் கோயில்தோறும் திருநடம் புரியும் மன்ற முண்டாதலின், “தியாகப் பெருமான் திருநடத்தை ஒற்றியிற் போய்க் கண்டேன்” என்றும், கண்டதன் பயன் பிறவித் தொடர்பு அற்றது என்பாள் “பிறவி கண்டிலனே” என்றும், அத்துணை யெளிமையில் பெரும் பிறவித் தொடர்பு நீங்கினமை கேட்பார்க்கு வியப்பை விளைவிப்பது பற்றி, “யார்க்கென் றுரைப்பேன்” என்றும் நங்கை கூறுகின்றாள். கருமுகில் தவழும் சோலை, “கார்க்கண்பொழில்” எனப்படுகிறது.
இதன்கண், ஒற்றியூரில் திருநடங் கண்டாட்குப் பிறவித் தொடர்பற்றது என்பதாம். (3)
|