1363. உள்ளும் புறமும் நிறைந்தடியார்
உள்ளம் மதுரித் தூறுகின்ற
தெள்ளும் அமுதாம் சிவபெருமான்
தியாகப் பெருமான் திருமுகத்தைக்
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க்
கண்டேன் பசியைக் கண்டிலனே
எள்ளல் இகந்தேன் அம்மாநான்
என்ன தவந்தான் செய்தேனோ.
உரை: சிவனடியார் திருவுள்ளத்தில் அகமும் புறமும் நிறைந்து மதுரித்துச் சுரக்கின்றதாகிய தெள்ளிய அமுதாகும் சிவபெருமானான தியாகப் பெருமானுடைய திருமுகத்தழகை மனத்திற் படியும் கள்ளங்களைப் போக்கும் திருவொற்றியூர்க்குட் போய்க் கண்டு பசி நீங்கினேன்; பிறர் கண்டு இகழத்தக்க நிலையும் எய்திற்றிலேன்; அம்மா, யான் செய்த தவம் யாதோ, அறியேன். எ.று.
அடியார் - சிவனடியே சிந்திக்கும் திருவுடைய ஞானிகள். அவருடைய மனத்தின்கண் அகமும் புறமும் நிறைந்து இன்பத்தேனாய் இனிக்கின்ற தெள்ளமுது சிவபெருமான் என்பார், “அடியார் உள்ளம் நிறைந்து உள்ளும் புறமும் மதுரித் தூறுகின்ற தெள்ளும் அமுதாம் சிவபெருமான்” என்று சிறப்பித்துரைக்கின்றார். திருமுகம், ஈண்டுத் திருமுகத் தழகின் மேனின்றது. ஒற்றியூர் வாழ்நரிடையே கள்ளச் செயலின்மை காட்டற்குக் “கள்ளம் தவிர்க்கும் ஒற்றி” என்றார். கள்ளம் புரியக் கருதிய நம்பியாரூரர்க்கு அது நிகழவிடாமல் சிவபிரான் தடுத்த வரலாற்றை நினைவிற்கொண்டு இங்ஙனம் கூறினா ரென்றுமாம். அழகு கண்டதால் பசி போயிற் றென்னும் உலக வழக்கு நோக்கிப் “பசியைக் கண்டிலனே” என்று பரிபவப்படுகின்றார். பசியின்மை மேனிக்கண் மெலிவு விளைவித்து எள்ளற்பாட்டை யெய்துவிக்கு மென்பதற்கு மாறாக இனிது செய்தமைக்கு வியந்து, “எள்ளல் இகந்தேன் அம்மா நான்” என்றும், இந்நிலைக்கு எத்தகைய தவம் செய்தேனோ என்பாள், “என்ன தவம்தான் செய்தேனோ” என்றும் உரைக்கின்றாள்.
இதனால், தியாகப்பெருமான் திருமுகத்தைக் கண்டவள், பசியும் மெலிவுமின்றிப் பிறர் கண்டு இகழும் எள்ளற்பாடு மின்றானது கூறியவாறாம். (4)
|