1364.

     ஆவல் உடையார் உள்ளுடையார்
          அயன்மால் மகவான் ஆதியராம்
     தேவர் பெருமான் சிவபெருமான்
          தியாகப் பெருமான் திருவடிவைக்
     காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க்
          கண்டேன் கண்ட காட்சிதனை
     யாவர் பெறுவார் அம்மாநான்
          என்ன தவந்தான் செய்தேனோ.

உரை:

      தன்பால் அன்புடையாரை உள்ளத்தே யுடையவரும், பிரமன் திருமால் இந்திரன் முதலிய தேவர்கள் பெருமானும், சிவபெருமானுமாகிய தியாகப் பெருமானது திருவடிவத்தைக் காவும் அழகிய பொழிலும் சூழ்ந்த திருவொற்றியூர்க்குச் சென்று கண்டு இன்புற்றேன்; அம்மா, நான் கண்ட காட்சியை வேறு எவரும் பெறார்; பெறுதற்கு யான் என்ன தவம் செய்தேனோ, அறியேன். எ.று.

     ஆவல் - அன்பு. உள் - திருவுள்ளம். காவல் பொழில், காவும் அழகிய பொழிலும் எனக் கொள்க. உண்மையன்புடைய அடியார்களை உள்ளத்தே மறவாமற் கொண்டவர் என்பதை, “ஆவலுடையார் உள்ளுடையார்” என உரைக்கின்றார். மகவான் - இந்திரன். ஒற்றியூரில் சிவபெருமான் தந்த காட்சி நங்கையின் நல்லுள்ளத்தை மிகவும் மகிழ்வித்தமையின், “யான் கண்ட காட்சிதனை யாவர் பெறுவார்” என்றதனோ டமையாது, “என்ன தவந்தான் செய்தேனோ” என்று வேறு விளம்புகின்றாள்.

     இதனால், ஒற்றியில் நங்கை கண்ட காட்சியை வேறு எவரும் காண்டலிலர் என்பதாம்.

     (5)