1365. மறப்பை அகன்ற மனத்துரவோர்
வாழ்த்த அவர்க்கு வான்கதியின்
சிறப்பை அளிக்கும் சிவபெருமான்
தியாகப் பெருமான் திருநடத்தைப்
பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப்
பேரா னந்தம் பெறக்கண்டேன்
இறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான்
என்ன தவந்தான் செய்தேனோ.
உரை: மறத்தல் இல்லாத மனமுடைய சான்றோர் வாழ்த்த அவர்கட்குத் தேவகதியினும் சிறந்த கதியை அளிக்கின்ற பெருமானாகிய தியாகப் பெருமானுடைய திருக்கூத்தை, பிறப்பை நீக்கும் திருவொற்றியூர்க்குச் சென்று கண்டு பேரானந்தம் எய்தப் பெற்றேன்; இறத்தலின் நீங்கினேன்; அம்மா, நான் என்ன தவம் செய்தேனோ அறியேன். எ.று.
நினைப்பு மறப்பற்ற சான்றோரை “மறப்பை யகன்ற மனத்து உரவோர்” என்று வள்ளலார் குறிக்கின்றார். சாக்கிரத்தே அதீதத்தைப் புரிபவர் என்று சைவர் கூறுவதுண்டு. முப்போதும் அவர்கள் சிவனை வழிபட்டுத் திருவைந்தெழுத்தை யோதி வாழ்த்துவராதலின், அவர்கட்குத் தேவகதியினும் சிறந்த சிவகதியை அளிப்பதுபற்றி, “வான்கதியின் சிறப்பை யளிக்கும் சிவபெருமான்” என்று தெரிவிக்கின்றார். திருவொற்றியூரை யடைந்து சிவனை வழிபட்டார் பிறப்பறுவர் எனத் தலபுராண முரைத்தலின், “பிறப்பை யகற்றும் ஒற்றி” என்று புகழ்கின்றார். சிவன் பிறவா யாக்கைப் பெருமானாதால் அவனை யடைந்தோரும் அது பெறார் எனபது பற்றி, “இறப்பைத் தவிர்த்தேன்” என எடுத்து உரைக்கின்றார்.
இதனால், திருவொற்றியூரிற் சிவனைக் கண்டு வழிபட்டோர் பிறப்பிறப் பிலராவர் என்பது பெற்றாம். (6)
|