1366. வில்லாம் படிப்பொன் மேருவினை
விரைய வாங்கும் வெற்றியினான்
செல்லாம் கருணைச் சிவபெருமான்
தியாகப் பெருமான் திருக்கூத்தைக்
கல்லாம் கொடிய மனம்கரையக்
கண்டேன் பண்டு காணாத
எல்லாம் கண்டேன் அம்மாநான்
என்ன தவந்தான் செய்தேனோ.
உரை: பொன்னாகிய மேருமலையை வில்லாமாறு விரைந்து வளைக்கும் வெற்றியையுடையவனும், மேகம்போற் கருணை பொழியும் சிவபெருமானுமாகிய தியாகப்பெருமானுடைய திருக்கூத்தைக் கற்போற் கொடிதாகிய மனம் கரைந்துருகுமாறு கண்டேனாக, இதற்குமுன் காணாத பல இனிய காட்சிகளைக் கண்டேன்; அம்மா, நான் என்ன தவம் செய்தேனோ அறியேன். எ.று.
மேருமலை பொன்மலையெனப் படுவது பற்றி “பொன் மேரு” என்றும், அது வில்லாக வளைக்கப்பட்டமை பற்றி “வில்லாம் படி மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்” என்றும் விளம்புகிறார். வாங்குதல் - வளைத்தல். “மேருவரைக்கும் வந்தன்று வளைவு” என்பர் சிவப்பிரகாசர். செல் - மேகம். மனம் கற்போல் இறுகியிருத்தல் பற்றி, “கல்லாம் கொடிய” என்று கூறுகின்றார். இறைவன் திருவடிக் காட்சி காணாதன காணச் செய்யும் என்பதைத் திருநாவுக்கரசர், “கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் (ஐயாறு)” என்பது காண்க. அறிய தவஞ்செய்தார்க் கல்லது இக் காணாக் காட்சி கைவராதாதலின் “என்ன தவம் செய்தேனோ” என்று வியக்கின்றார்.
இதனால், தியாகப் பெருமான் திருக்கூத்து காணாதன காணச் செய்யும் காட்சி சான்றது என்பதாம். (7)
|