1367. ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ
உற்று நகைத்தோன் ஒற்றியுளான்
தில்லை நகரான் சிவபெருமான்
தியாகப் பெருமான் திருப்பவனி
கல்லை அளியும் கனியாக்கக்
கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர்
எல்லை அறியேன் அம்மாநான்
என்ன தவந்தான் செய்தேனோ.
உரை: மதில் மூன்றும் விரைவில் எரி கொள்ளும்படி நினைந்து நகைத்தவனும், திருவொற்றியூரில் உள்ளவனும், தில்லை நகரத்தை யுடையவனும், சிவபெருமானுமாகிய தியாகப்பெருமானுடைய திருவுலாவானது கல் போன்ற மனத்தை அளிந்த கனியாக்குவது கண்டு எல்லையில்லாத மகிழ்ச்சி கொண்டேன்; இதற்கு அம்மா, நான் என்ன தவம் செய்தேனோ, அறியேன். எ.று.
எயில் மூன்று - திரிபுரத்தசுரர் கொண்டிருந்த மூன்றாகிய மதில்; அவை பொன் வெள்ளி இரும்பாலாகியவை என்பர். அம்மதில்களைக் கண்டு சிவன்முறுவலித்த மாத்திரையே அவைகள் எரிந்து சாம்பராயின. தில்லை நகர்: இந்நாளில் சிதம்பரம் என வழங்குவது. பவனி - உலா. கல் போன்ற மனத்தைக் குழைவித்த திறம் கண்டு “கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன்” என்றும், கண்டவிடத்துப் பிறந்த வியப்பினால் எல்லையற்ற இன்பமுண்டாயிற் றென்பார், “களிப்பினுக்கோர் எல்லை யறியேன்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், பவனி கண்ட எனக்குக் கல்போன்றிருந்த மனம் அளிந்த கனியாயிற்றெனத் தெளிய உணர்ந்தவாறாம். (8)
|