1368.

     துன்னும் சோம சுந்தரனார்
          தூய மதுரை நகர்அளித்த
     தென்னர் பெருமான் சிவபெருமான்
          தியாகப் பெருமான் திருஅழகைப்
     பன்னும் ஒற்றி நகர்தன்னில்
          பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த
     என்னை மறந்தேன் அம்மாநான்
          என்ன தவந்தான் செய்தேனோ.

உரை:

      புகழ் பொருந்திய சோம சுந்தரக் கடவுளின் தூய நகரமாகிய மதுரையைக் காத்தளித்த தென்னர் பெருமானும், சிவ பெருமானுமாகிய தியாகப் பெருமானது சிறந்த அழகைப் பலரும் புகழ்ந்துரைக்கும் திருவொற்றியூரில் பார்த்த யான், செய்த வினைகள் நீங்கிப் போகின்ற நெறியைக் கண்டு வியந்து என்னையே மறந்து போனேன்; அம்மா, இதற்கு நான் செய்த தவந்தான் யாதோ? எ.று.

     'புகழ் துன்னும்' என ஒரு சொல் வருவிக்க. சிவபிரான் பாண்டி வேந்தாய் ஆண்டபோது சோமசுந்தரனாய் விளங்கினான் என்று புராணம் கூறலின் “சோமசுந்தரனார்” என்றும், பாண்டியனாய் மதுரையை யாண்டமை பற்றி “மதுரைநகர் அளித்த தென்னர் பெருமான்” என்றும், எனினும் அவன் சிவனே என்பது மறத்தலாகாமைக்குச் “சிவபெருமான்” என்றும், ஒற்றியூரில் அவன் பெயர் இதுவென்றற்குத் “தியாகப் பெருமான்” என்றும் கூறுகின்றார். பவனி வந்தாரைப் பார்த்த நங்கைக்கு வினை நீங்கியது தவப் பேறாகலின், “என்ன தவந்தான் செய்தேனோ” என இயம்புகின்றாள்.

     இதனால், தியாகப்பெருமான் பவனி காண்பார் வினை நீங்கற்கு ஏதுவாம் என்றவாறாயிற்று.

     (9)