1369.

     முன்னம் காழி வள்ளலுக்கு
          முத்துச் சிவிகை குடையொடுபொன்
     சின்னம் அளித்தோன் சிவபெருமான்
          தியாகப் பெருமான் திருவடியைக்
     கன்னின் றுருகா நெஞ்சுருகக்
          கண்டேன் கண்ட காட்சிதனை
     என்என் றுரைப்பேன் அம்மாநான்
          என்ன தவந்தான் செய்தேனோ.

உரை:

      முன்னால் சீர்காழி வள்ளற் பிரானாகிய திருஞான சம்பந்தர்க்கு முத்துச் சிவிகையும் குடையும் பொற் சின்னமும் அளித்தவனும், சிவபெருமானுமாகிய தியாகப் பெருமான் திருவடியைக் கற்போல் நின்று உருகுதல் இல்லாத நெஞ்சு உருகியோடக் கண்ணாற் கண்டேன்; திருவருட் கண்ணாக யான் கண்ட காட்சியை என்னென்பேன்? அக் காட்சி பெறற்கு என்ன தவம் செய்தேனோ அறியேன். எ.று.

     திருஞான சம்பந்தர்க்கு முத்துச் சிவிகையும் பிறவும் சிவன் அருளியதைச் சேக்கிழார் அருளிய திருஞான சம்பந்தர் புராணம் தெளிவாகக் கூறுகிறது. கற்போல் நின்று உருகாத நெஞ்சம் என்பதைக் “கன்னின்றுருகா நெஞ்சம்” என்கின்றார். இதனால், திருவடி காணப் பிறந்த ஞானக் காட்சி காணாதனவெல்லாம் காட்டுகின்றது என்றதாம்.

     (10)