137.

    எது செய்குவ னேனு மென்றனை
        ஈன்றநீ பொறுத்திடுத லல்லதை
    ஈது செய்தவ னென்றிவ் வேழையை
        எந்தவண்ணம் நீ யெண்ணி நீக்குவாய்
    வாது செய்வனிப் போது வள்ளலே
        வறியனேன் என மதித்து நின்றிடேல்
    தாது செய்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
        சாமியே திருத் தணிகை நாதனே.

உரை:

     தேன் சொரியும் பூக்கள் நிறந்த சோலைகள் சூழ்ந்த திருப் போரூரில் மேவும் சாமியே! திருத்தணிகை நாதனே, இவ்வுலகில் என்னைப் பிறப்பித்தவன் நீ யாதலால், யான் எதனைச் செய்தாலும் என்னைப் பொறுத்து ஆட்கொள்வதை விடுத்து, இவன் இக் குற்றத்தைச் செய்தவன் என்று கருதி ஏழையாகிய என்னை நீ எவ்வாறு நின்னுடைய அருட் சூழலினின்றும் நீக்குவாய்? நீக்கினால் அது குறித்து யான் வாதாடாமல் ஒழியேன்; அருள் வள்ளலே, இப்போது நான் அருட் பேற்றுக் குரிய தகுதிகளால் வறுமை யுற்றவன் என்று திருவுள்ளத்திற் கொள்ளலாகாது, காண், எ. று.

     தாது- தேன். “தாதார் கொன்றை” என்பது காண்க. தேன் சொரியும் மலர்ப் பொழிலைச் சிறந்தெடுத்து மொழிவது, வண்டினம் பெருக நிறைந்து தேனுண்டு மகிழ்ந்து பாடுவது போல மெய்யன்பர்கள் மிகப் பலராய்க் கூடி முருகப் பெருமான் திருவருள் ஆர்ந்து அவன் திருப்புகழைப் பாடி யின்புறும் திறத்தை உள்ளுறுத்து நிற்கிறது. என்றனை ஈன்ற நீ என்ற தொடர், இவ்வுலகில் இவ்வுடலுடன் கூடிப்பிறந்து இயலச் செய்தவன் என்ற பொருள் தோன்ற அமைந்துளது. அருட்டுணை யின்றி நெஞ்சின் துணை கொண்டு அது செலுத்தும் நெறியிற் சென்று செய்வன செய்கின்றே னென்பார், “ஏது செய்குவனேனும்” என்றும், சேய் செய்யும் எதனையும் தாய் பொறுத்து அன்பு செய்வது முறையாதலால், தாயாகிய நீ பொறுத்தல் வேண்டுமே யன்றி வெறுத்து விலக்கலாகாது என்றற்கு “நீ பொறுத்திடுதல் அல்லதை” என்றும் கூறுகின்றார். அல்லதை, ஈற்று ஐகாரம் சாரியை. “பலவுறுநறுஞ் சாந்தம் படுபவர்க்கல்லதை” (கலி) என்று சான்றோர் வழங்குதல் காண்க. இது சான்றோரிடையே பெரு வழக்குடைய சொல்லாகும். பெருமக்கள் எதனையும் காரணமின்றிக் கொள்ளுவதும் தள்ளுவதும் இல்லையாகலின், முருகப் பெருமான் விலக்கும் திறத்தை “ஈது செய்தவன் என்று நீக்குவன்” எனவும், இவ்வாறு எளிதில் தள்ள விடேன் என்பாராய், “இவ்வேழையை எந்த வண்ணம் நீ எண்ணி நீக்குவாய்” எனவும் கூறித் தள்ளுவையாயின் வாது புரிந்து என்னைக் கொள்ளல் வேண்டுமென வற்புறுத்துவேன் என்பாராய், “வாது செய்வன் இப்போது; வறியனேன் என மதித்து நின்றிடேல்” என வுரைக்கின்றார். “இல்லாரை எல்லாரும் எள்ளுவர்” (குறள்) என்பது பற்றி என்னை இகழ்தல் கூடாது என்றற்கு, “வறியனேன் என மதித்திடேல்” என்றும் வள்ளன்மை யுடையவரிடத்து இவ்விகழும் செயல் காணப்படா தென்பாராய், “வள்ளலே” என்றும் மொழிகின்றார்.

     இதன்கண், அருட் பேற்றுக்குத் தக்க நலங்கள் இல்லாதவ னெனக் கருதி எனைப் புறக்கணித்தல் வேண்டாமென முறையிடுமாறு காண்க.

     (7)