73. திருச்சாதனத் தெய்வத் திறம்
திருச்சாதனத்
தெய்வத் திறம் என்பதில் திரு சிவப்பேற்றையும், சாதனத் தெய்வத் திறம், அப்பேற்றுக்குச்
சாதனமாய் விளங்கும் தெய்வத்தின் கூறுபாட்டையும் பொருளாகக் கொண்டவை. பரசிவ போகத்தைப்
பெறுதற்கு முயலும் ஆன்மாவுக்குச் சாதனமாக விளங்குவது சிவமூர்த்தம். அது நோக்கியே இப்பத்துக்கு
இப்பெயர் தரப்பட்டுளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முத்தி சாதனம் மூன்றனுள்
சிவமூர்த்தம் ஒன்றாதலால், அதனைத் திருச்சாதனமான தெய்வம் என்று குறித்துள்ளார்கள்.
ஓருருவும், ஒருநிறமும் ஒன்றுமில்லாத பரம் பொருட்கு உருவும் நிறமும் திருவும் பிறவும் உளவாயவிடத்து
அது தெய்வமாம் என அறிக. குணம் குறிகளில்லாத பரம்பொருள் தெய்வமாகியபோது சத்துவ
குணநலங்களும் அவற்றிற்கொத்த நற்செயல்களும் கூறப்படும். குணஞ் செயல்களை விளக்கும் புராண
வரலாறுகளை ஆங்காங்கு உவமமாகவும் பொருளாகவும் புலவர் பெருமக்கள் எடுத்துரைப்பார்.
மூர்த்தங்கட்கு உருக்கொடுக்கும் திருநீறும், அக்குமணி மாலையும், தோலுடையும், சூலப்படையும்,
திருவடிக் கழலும் பிறவும் திருமூர்த்தங்களிடத்து அன்புகொண்டு அருச்சித்து வழிபட்டின்புறுதற்குச்
சிவ சாதனம் என்னாமல் திருச்சாதனம் எனப் பெயர் தரப்பட்டுளது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1370. உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட
ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ
அடையாளம் என்னஒளிர் வெண்ணீற் றுக்கும்
அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ
நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று
நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும்
இடையாத கொடுந்தீயால் சுடினும் அன்றி
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
உரை: எந்தையே, எல்லாம் உடைய முதல்வனாகிய உன் அடியவர்க்கும், அவர் உடல்மேல் அணியும் ஒள்ளிய மணியாகிய உருத்திராக்க மணிக்கும், உயர்ந்த சைவ அடையாளமாகத் திகழும் வெண்ணீற்றுக்கும் அன்பின்றி, அஞ்சுதலுமின்றி, அந்தோ, உலக நடைக்குரிய உடல் முற்றும் நாவாய்க் கொண்டு நின்று சொல்லுகின்றேன்; பாவியாகிய எனது நாவைச் சிறிது இடைவிடாமற் கொடிய நெருப்பால் சுட்டாலும், வேறு என்ன செய்தாலும், அத் தண்டனை நிரம்பாது. எ.று.
உலகங்கள் அனைத்தையும் படைத்தளித்து அழிக்கும் முதல்வனாய், அவற்றின் முதற்காரணத்தைத் தனக்குள் ஒடுக்கியுள்ளவனாதலின், பரமசிவனை “உடையாய்” என்று கூறுகின்றார். முதல்வனிடத்து உண்மை யன்புளதாயின், அவன் அடியாரிடத்து இயல்பாகவே அன்புண்டாகும்; எனக்கு அஃது இல்லை என்பாராய், “அன்பிலேன்” என்றும், அந்த அடியவர்கள் தமது மேனிமேல் அணிந்த அக்குமணி மாலையைக் கண்டவிடத்து, அன்பின்மைக்கு நாணி அஞ்சவேண்டிய யான் அது செய்திலேன் என்றற்கு “அவர் மேல் பூண்ட கண்மணிக்கும் அன்பிலேன்” என்றும், மேனிமேல் மெய்யின்பால் ஒட்டித் தோன்றும் வெள்ளிய திருநீற்றைக் கண்டும் அன்போ அச்சமோ கொண்டிலேன் என்பாராய், “ஒளிர் வெண்ணீற்றுக்கும் அன்பிலேன் அஞ்சாமல்” என்றும் இயம்புகின்றார். அக்குமணி மேனிக்கு அழகு செய்வதுடன் உள்ளுக்கு மருந்துமாவதால், அதனை “ஒண்மணியாம் கண்மணி” என்று சிறப்பிக்கின்றார். உருத்திர அக்கமணி - உருத்திரக் கண்மணி; சைவர்க்குரிய அடையாளங்களில் வெண்ணீறு மிக்க மேன்மைத் தென்றற்கு ஓங்கு சைவ அடையாளம் என்னவொளிர் வெண்ணீறு என்று விளம்புகின்றார். கண்மணியும் வெண்ணீறும் சிவமூர்த்தத்துக் கணியாய்ச் சிவனடியார்கட்குச் சிவ சாதனங்களாம் என அறிக. அன்பின்மையும் அஞ்சாமையும் பெரியதோர் அவலம் விளைவிப்பதால், “அந்தோ அந்தோ” என்று புலம்புகின்றார். நடை - உலக நடை மேற்று. உலக மக்களிடையே ஒப்புரவுசெய்து தக்கார்க்குத் தக்கவாறு, நடத்தற்குரிய கருவியாவது உடலாதலின் “நடையாய வுடல்” என்றும் வாயிடத்து நாவொன்றாயினும், உடல் முழுதும் வாயாகவும், வாயெல்லாம் நாவாகவும் உரைப்பதாகப் புனைந்து கூறுதல் தோன்ற, “உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன்” என்றும் இசைக்கின்றார். அன்பின்மையும் அச்சமின்னமையும் புலப்படுக்கும் சொற்களை நாமொழிகின்றமையின் ஆற்றாராகிய வள்ளலார், என் பாவி நாவைக் கொடுந்தீயாற் சுடினும் வேறு யாது செய்து ஒறுக்கினும் தண்டனை நிரம்பாது என்றற்குக் “கொடுந்தீயாற் சுடினும் அன்றி என் செயினும் போதாதே” என்று சொல்லி, அதனால், மனநோய் குறையாமையால் “எந்தாய் எந்தாய்” என்று அவலிக்கின்றார்.
இதன்கண், அடியார்க்கும், அவர் பூண்ட கண்மணிக்கும் வெண்ணீற்றுக்கும் அன்பு அச்சமாகிய இரண்டும் இன்மை நினைந்து வருந்திப் புலம்புமாறு காண்க. (1)
|