1371.

     கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன்
          கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன்
     பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப்
          பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே
     நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று
          நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ
     எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி
          என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

உரை:

      எந்தையே, கண் பொருந்திய நெற்றியையுடைய சிவபெருமானே, நினக்கு அடியராகிய சான்றோரைக் கண்ணாற் பார்ப்பதும், அவர்கள் அணிந்திருக்கும் கண்மணி மாலையைக் கண்டு மனம் கனிந்து நிற்பது, செம்மை செய்யப்பட்ட திருநீற்றுக் கோலத்தை நோக்குவதுமாகிய இவற்றைச் செய்யாத, மதியாத குற்றத்துக்கு அஞ்சினேனில்லை; பயனின்றி, உயிர்க்கென வந்துள்ள உடம்பெல்லாம் வாயுற்ற நாவாய்க் கொண்டு சொல்லுகின்றேன்; எனது கொடுமையுடைய நாவினை, கொடிதென எண்ணப்படுகின்ற பெரிய தீயினால் சுட்டாலும் வேறு யாது செய்யினும் தண்டனை நிரம்பாது, காண். எ.று.

     தவறு செய்தாரை ஒறுத்தற்குரிய கண்ணாக விளங்கும் குறிப்பு விளங்கக் “கண்ணுதலே” என்று கூறுகின்றார். சிவனடியாரைச் சிவன் என்று தெளிந்து வணங்கி வழிபடுவது கடனாக, அதனைச் செய்யாது ஒழிந்த செயற்கு மனம் நொந்து மொழிகின்றாராதலால், “நின் அடியார் தமையும் நோக்கேன்” என வுரைக்கின்றார். நோக்குதல், ஈண்டு நன்கு மதித்து வழிபடல் மேற்று. கண்மணி மாலை சிவவேடத்துக்குரிய பூண் வகையில் தலையாயது பற்றி, “கண்மணி மாலைக் கெனினும் கனிந்து நில்லேன்” என்று கூறுகின்றார். கண்மணி என்ற பெயர், பூணும் மணிக்குப் பெயராயினும், சிவபரம்பொருளின் கண்மணியை நினைப்பித்து நெஞ்சில் அன்பாற் குழைவு பிறப்பிக்கும் சிறப்புப் பற்றி, “கனிந்து நில்லேன்” என மொழிகின்றார். திருநீற்றுக் கோலம் இறைவன் எல்லாப் பொருள்களையும் ஒடுக்கி நீறாக்கித் தான் மாத்திரம் ஒடுங்காமல் அந் நீற்றினைத் தன் மெய்யில் அணிந்துகொண்ட திப்பிய செயலை அறிஞர் கண்டு, ஒடுக்கத்தின் உண்மை யுணர்ந்து அஞ்சுவது இயல்பாதல் காட்டற்குத் “திருநீற்றுக் கோலம் தன்னைப் பார்த்தேனும் அஞ்சுகிலேன்” என்று இயம்புகின்றார். கருமை, பொன்மை முதலிய நிறமின்றித் தூய வெண்ணிறமே கொண்ட திருநீறு கண்ணும் கருத்துமாகச் செய்யப்படுவது விளங்கப் “பண்ணுதல் சேர் திருநீறு” என்று சிறப்பிக்கின்றார். சிவ பூசை முதலிய திருப்பணிக்கும் சிவத்தொண்டுக்கும் சிவனடியார்க்கும் ஏனை யுயிர்கட்கும் தொண்டுசெய்து பயன்படாமை உள்ளது உடம்பு என்றற்குப் “பயனிலாமே நண்ணுதல் சேர் உடம்பு” என்றும், அவ்வுடம்பெல்லாம் நாப் பொருந்திய வாயாகக்கொண்டு உள்ளதுரைக்கின்றேன் என்பாராய், “உடம்பெல்லாம் வாயாய் நின்று நவில்கின்றேன்” என்றும் இசைக்கின்றார். சிவநெறிக்காகாது தீ நெறிப்பட்டமையின் எனது நாவினைத் தீயாற் சுடலாம்; வேறு யாதும் செய்யலாம். ஆயினும் அது செய்த குற்றத்துக்குக் கழுவாயாகாது என்பாராய், என் கொடிய நாவை அந்தோ கொடுந் தீயாற் சுடினும், அன்றி என் செயினும் போதாதே எந்தாய்” என்று புகன்று மொழிகின்றார். காற்று வழி நின்று நாற்றிசையும் வளைந்து சுழன்று எரிவது பற்றி, “கொடுந்தீ” என்றும், அதன் வெம்மையின் அளவு மனத்தால் எண்ணிக் காண்பதல்லது வேறு வகையால் அறிய வாராமையின் “எண்ணுதல் சேர் கொடுந்தீ” என்றும் குறித்திசைக்கின்றார்.

     இதன்கண், அடியார்க்கும் கண்மணி மாலைக்கும் திருநீற்றுக் கோலத்துக்கும் மனத்திற் கனிவும் அச்சமும் இன்றிய நிலைக்கு வருந்துமாறு கூறியவாறாம்.

     (2)