1372. வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண்
மாமணியே உனைநினையேன் வாளா நாளைக்
கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும்
களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை
நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால்
நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால்
எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும்
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
உரை: வஞ்சனை நினையாத நன்மக்கள் மனத்திண்கண் பொருந்துகின்ற கண் மூன்றுடைய மணி போன்ற பெருமானே! உன்னைச் சிந்திப்பதின்றி, வீணாக என் வாழ்நாளைத் தாமரைபோன்ற முகமுடைய மகளிர்க்கும், பிறரோடு வாதம் புரிவதில் பிறக்கும் மகிழ்ச்சிக்கும் கழித்துக் கடையவனாகின்ற என்னை, நஞ்சினை உண்ணக் கொடுத்துக் கொன்றாலும், வாட்படை கொண்டு சாகுமாறு துண்டாக வெட்டிடினும், துன்புறுமாறு தீயில் வெந்து கரியும்படி சுட்டாலும், அல்லது இன்னும் அந்தோ என்ன செய்தாலும், எந்தாய், என் குற்றத்துக்கு ஒத்த தண்டனையாகாது. எ.று.
நினைவுக்கு மாறாகப் பேசுதலும் செய்தலும் வஞ்சித்தலாகிய குற்றமாகும். அஃது இல்லாத பெருமக்களை “வஞ்சமிலார்” என்றும் அந் நெஞ்சம் எப்போதும் தூயதாதலால் இறைவன் எழுந்தருளும் நலம் பாராட்டி, “வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மாமணியே” என்றும் மொழிகின்றார். மணி யெனப் பொதுப்படக் கூறினாராயினும், சிவன் செம்மேனி யம்மானாதல் பற்றி, மாமணி யென்றது மாணிக்கமணி எனக் கொள்க. நினைவத்தனையும் சிவன்பாற் செலுத்த வேண்டுவது கடனாகும். இது செய்யாமை நினைந்து வருந்து மாற்றை “உனை நினையேன் வாளா நாளைக் கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன்” என்று கூறுகின்றார். உனை நினைந்த வழி எய்தும் ஞானமும் இன்பமும் வேற்று நினைவில் எய்தாமையின் “வாளா நாளைக் கழிக்கின்றேன்” என்றும், அந்நிலையில் மகளிர் முகப் பொலிவில் தோய்ந்து நெஞ்சம் அழிந்தது என்பார், “கஞ்சமலர் முகத்தியர்க்கும்” என்றும், ஒழிந்தபோது பயனில் பொருள்களை மேற்கொண்டு வெறுஞ் சொல்லாளர் தம்மோடு வாதப் பிரதிவாதம் புரிந்து அதன்கட் பிறக்கும் மகிழ்ச்சியில் மைந்துற்றுச் சீர்குலைந்தேன் என்பது விளங்க, “வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன்” என்றும், அச் செயல்வகைகளால் சிவஞானச் செல்வர் திருமுன் கடைப்பட்டவனானேன் என்பது தோன்றக் “கடையனேனை” என்றும் இசைக்கின்றார். பயனில் வாதங்களாலும் மகளிர் மயக்கத்தாலும் ஈட்டிய குற்றத்துக்குத் தண்டனையாக எனக்கு நஞ்சு தந்து கொன்றாலும் ஈடாகா தென்றற்கு, “நஞ்ச முணக் கொடுத்து மடித்திடினும்” என்றும், உயிரிழந்து சாகுமாறு வாளால் துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தினும் நிறைவுறா தென்றற்கு “வாளால் நசிப்புறவே துணித்திடினும்” என்றும், தீயிற் சுட்டுச் சாம்பராக்காமல் வெந்து உடல் கருகித் தோன்றுமளவில் சுட்டு வைப்பினும் போதாது என்றற்கு “எஞ்சலுறச் சுடினும்” என்றும் எடுத்து மொழிகின்றார்.
இதன்கண், சிவனை நினையாது மகளிர் கூட்டத்தையும், வாது பேசுவோர் சூழலையும் விரும்பி யொழுகுமாற்றால் நாளை வீணிற் கழித்தமைக்கு வருந்துமாறு காணலாம். (3)
|