1373.

     அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண்
          ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச
     மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை
          வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை
     வெருள் பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று
          வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா
     இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி
          என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

உரை:

      அருளாகிய கனி பழுக்கும் கற்பக மரமே, அரசே, மூன்றாகிய கண்களையுடைய அரிய அமுதமே, நின்னைப் புகழ்வதில்லேனாய், அந்தோ, வஞ்சனையும் மருட்சியும் பழுத்திருக்கும் நெஞ்சினைக் கொண்டு வீணாக வாழ்நாளை வாதம் புரிந்து கழித்து வருகின்றேன்; நல்லறிவு இல்லாத என்னை அச்சம் நிலவும் கடிய காட்டின்கண் கொண்டு சென்று விட்டொழித்தாலும், ஆற்று வெள்ளத்தில் மிதந்தேகுமாறு விட்டாலும், பொல்லாத இருள் நிறைந்த பிலத்துவாரத்தே வீழ்த்தினாலும்,, அன்றி வேறே என்ன செய்தாலும், எந்தாய், என் குற்றத்துக்கு ஒத்த தண்டனையாக நிரம்பாது. எ.று.

     கற்பகம் - இனிய கனி நல்கும் தேவ வுலக நன்மரம். கற்பகம் போலத் திருவருளாகிய கனிமை அருளுவதுபற்றி இறைவனை “அருள் பழுக்கும் கற்பகமே” என்று பரவுகின்றார். அருளாட்சி புரிவதால் “அரசே” என்கின்றார். மூன்று கண் கொண்டு பெறற்கரிய அமுதமாய் ஞானவின்பம் அளிப்பதனால், “முக்கண் ஆரமுதே” என்று மொழிகின்றார். புகழ்ந்து இன்புற்று வாழ்தற்குரிய யான், அது செய்யாது கழிகின்றேன் என்று வருந்திக் கூறலுற்றவர், “நினைப் புகழேன் அந்தோ” என்று புலம்புகின்றார். புகழாத குற்றத்தை நினைந்து நினைந்து நெஞ்சில் மருட்சி கொள்வதும், அந்நிலையிலும் நெஞ்சு வேறு நினைவு செயல்களில் சென்று மீள்வதும் கண்டு, “வஞ்ச மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன்” என்று சொல்லி வருந்துகின்றார். இடையிடையே கற்றாரும் மற்றாரும் போந்து உலகியற்குரிய கருத்துக்களில் நெஞ்சினைப் புகுத்தி வாதப் பிரதிவாதங்களைத் தொடுத்துச் சிவபோகப் பேற்றுக்குரிய யோகஞான நன்னெறியில் நாட்களைச் செலவிட வேண்டிய நிலையை மாற்றி வீணாளாகக் கழியச் செய்தமை யெண்ணி, “வாளா நாளை வாதமிட்டுக் கழிக்கின்றேன்” என்றும், இங்ஙனம் வீணாவதை எண்ணி நோக்கி நெறிப்படுத்தும் நல்லறிவு இல்லாமையை எண்ணி “மதியிலேனை” என்றும், தம்மையே நொந்து வெகுள்கின்றார். தாம் செய்த குற்றத்துக்குத் தக்க தண்டனை நல்குவது ஒருவாற்றாற் கழுவாயாம் என்று கருதிக்கொண்டு, கடுங்காட்டிற்குக் கொண்டு சென்று விட்டொழிவது, அல்லது பெருகியோடும் ஆற்றில் கைகால்களைக் கட்டி வெள்ளமே ஈர்த்தேகுமாறு விடுவது, அல்லது பன்னூறடியாழ்ந்து இருண் மண்டிக் கிடக்கும் பிலத்துவாரத்தில் தள்ளிவிடுவது, வேறு யாதேனும் கொடியதொன்று செய்தாலும் தண்டனை நிரம்பிய தாகாது என்பாராய், “கடுங்காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்தேக விடினும் பிலஞ்சேர விடினும் அன்றி என் செயினும் எந்தாய் போதாது” என்று புகல்கின்றார். கொடுவிலங்கும் கள்வர்களும் தீங்கு பயக்கும் வேறு உயிர்களும் நிறைந்து அச்சம் பயக்கும் காட்டில் விடுவதைச் சுட்டி, “வெருள் பழுக்கும் கடுங்காடு” என்று சிறப்பிக்கின்றார். வெருள் - அச்சம். ஆற்று வெள்ளத்தில் நீந்த மாட்டாமல் புரண்டு அதனால் ஈர்ப்புண்டு போக விடுக என்றற்கு “ஆற்று வெள்ளத்தில் அடித்தேக விடினும்” என்றும், வீழ்ந்த பொருள் உருத் தெரியாமல் மறைந்து கெடுமாறு புலப்பட “இருள் பழுக்கும் பிலம்” என்றும் எடுத்தோதுகின்றார்.

     இதனால், பயனற்ற வாத நெறியிலே வீண் காலம் போக்கிய திறத்தை வடலூர் வள்ளல் குறிப்பிடுமாறு காண்க.

     (4)