1374.

     பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண்
          பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ
     கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
          கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை
     ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி
          உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க
     இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்
          என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

உரை:

      பெரிய அருளாகிய கடலே, எனக்குக் குருவே, மூன்று கண்களையுடைய பெருமானே, நின்னைப் புகழாமல், பேயனாகிய யான் அந்தோ, கரிய கற்போன்ற மனமாகிய குரங்கை ஆடச் செய்து என் வாழ்நாளை வீணாகக் கழிக்கின்றேன். வாழ்தற்குக் கிடைத்த நாட்களாற் பெறக்கூடிய உறுதிப் பயனை அறியாமற் கீழ்மைப்பட்ட என்னை பெரிய குன்றின் உச்சியிலேற்றி, ஒருங்கே வீழ்ந்துருளவும், உடல் இடிபாடு தாங்காது பதைக்கவும் உருட்டி விட்டாலும், உயிர் நடுங்க, உள்ளம் வருந்தி ஏங்கப் பெரிய கழுமரத்தில் ஏற்றினாலும், வேறு என்ன செய்யினும், எந்தாய், என் குற்றத்துக்குரிய தண்டனையாக நிரம்பாது, காண். எ.று.

     அருளுடைய பெரியோர் அனைவரும் கருணைக் கடலெனப்படுதலின், சிவனை வேறு நிறுத்திக் காட்டற்கு “பெருங் கருணைக் கடலே” எனவும், குணத் திரிபால் அறிவு மயக்குற்றுத் தெளிவிழந்து சுழலுமிடத்து ஞானவொளி தந்து உய்வித்தல் பற்றி, “என் குருவே” எனவும், எல்லாமறியவும் எல்லாம் செய்யுவும் வல்ல பெருமானாதலின், “முக்கண் பெருமானே” எனவும் மொழிகின்றார். நினைக்க நெஞ்சும், வாழ்த்த வாயும், வழிபட மெய்யும், வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலை எய்த உலகவாழ்வும் அருளிய சிவபெருமானைப் புகழ்வது இடையறவு படாக் கடனாக, அதனைச் செய்யாது பிழைத்த குற்றமேயன்றி, பேய் கொண்டாரைப் போல நிலையின்றி அலைந்து கீழ்மையுற்றதை எடுத்தோதி, “நினைப் புகழேன் பேயன் அந்தோ” என்று சொல்லி வருந்துகின்றார். “வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினையேன் நெடுங்காலமே” என்று, இக்கருத்து அப்பர் அருளிய திருப்பாட்டில் விளக்கமுறுவது காண்க. மனம் கல்லினும் வலிதாய் உருக்கமின்றி உறைப்புண்டும், குரங்குபோல் ஒன்றை விட்டு ஒன்றைப்பற்றி ஒன்றில் தாவியும் துள்ளியும் பயன் படாது ஆடியலைவதையும் சுட்டி, “கருங்கல் மனக்குரங்காட்டி நாளை வீணிற் கழிக்கின்றேன்” என்று கூறுகின்றார். நல்ல உடல் கருவி கரணங்களையும் வளவிய உலகையும் நெடிய வாழ்நாளையும் தந்து வாழ்வாங்கு வாழ்ந்து உறுதிப் பயனை எய்துக என்று உதவிய நாளைப் பயனின்றிக் கழிக்குமாற்றால் பெருங்குற்றம் செய்து கடைப்பட்டேன் என்பார், “பயன் அறியாக் கடையனேனை” என்று சொல்லிக் கவல்கின்றார். இப் பெருங் குற்றத்துக்காகத் தன்னைக் குன்றேற்றி யுருட்டல், கழுவேற்றல் ஆகிய தண்டனைக் குள்ளாக்கல் தகும் என்பாராய், “ஒருங்குருள உடல் பதைப்ப வுறுங் குன்றேற்றி உருட்டுகினும், உயிர் நடுங்க உள்ளம் ஏங்க இருங் கழிவில் ஏற்றுகினும்” என்றும், “அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய்” என்றும் இசைக்கின்றார். உடலைத் துண்டுபண்ணித் தலைவேறு கைகால் வேறாய் உருட்டாமல் எல்லாம் ஒருங்கே உருள வேண்டும் என விளக்குதற்காக, “ஒருங்குருள” என்று உரைக்கின்றார்.

     இதன்கண், இறைவனைப் புகழாது வீணாள் போக்கிய குற்றம் பற்றித் தண்டனை செய்தல் வேண்டும் என்றதாம்.

     (5)