1375. தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண்
சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில்
விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி
வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை
உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி
உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல்
எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
உரை: தொழுகின்ற அன்பர்களின் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் சுடரே, மூன்றாகிய கண்களையுடைய சுடர்க்கொழுந்தே, நின்னுடைய திருவடியைத் தொழாமல் வாதம் பேசுவோர் கூட்டத்தில் வீழ்ந்து, நன் மக்கள் கண்டு உள்ளத்தே வெறுப்படையுமாறு சொல்லாடி வெறியுற்றலையும் நாய்போன்ற வீணனாகிய என்னை நிலத்தை உழுகின்ற கலப்பையிற் கட்டும் நுகத்தடி கொண்டு நிலத்தே தள்ளி உடல் வருந்த உழக்கினாலும் நெடிய உடலம் நடுங்குமாறு வதைத்து, மேன்மேலும் அலைகள் எழுகின்ற கடலின்கண் ஆழ வீழ்த்தினாலும், அன்றி வேறே எவ்வகைத் துன்பம் செய்தாலும், எந்தாய், என் குற்றங்கட்குத் தக்க தண்டனை நிரம்பாது, காண். எ.று.
தொழுதல் - கைகூப்பிக் கும்பிடுதல்; ஈண்டு அது மனமொழி மெய்களால் ஒப்பச் செய்யப்படும் வழிபாட்டின்மேல் பொதுவாய் நிற்கின்றது. சிந்திப்பார் சிந்தைக்கண் சுடராய்க் காட்சி வழங்குதல் கண்டு கூறலின் “தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே” என்றும், அது சிவபரஞ்சுடர் என்றற்கு “முக்கண் சுடர்க் கொழுந்தே” என்றும் இயம்புகின்றார். மக்களுயிர் துதித்து வழிபடற்குரியது திருவடி என்பது பற்றி, “நின் பதத்தை” என்றும், தொழா தொழிந்த குற்றத்தைத் “துதியேன்” என்றும், வேறாகச் செய்த குற்றத்தை வீண்வாதம் புரியும் குற்றமெனக் காட்டுதற்கு ஒரு குழியாகக் குறிப்புருவகம் செய்து “வாதில்விழுகின்றேன்” என்றும் விளம்புகின்றார். வீண்வாதம் நல்லோர் மனத்துக்கு வருத்தம் தருதலோடு அவர்கள் மனம் வெறுக்குமாறு பேசுவித்தலால், “நல்லோர்கள் வெறுப்பப் பேசி” என்றும், அச்செயல் வெறியுற்றலையும் நாயின் செய்கையை யொத்தலை யுணர்ந்து, “வெறுத்துழலும் நாயனையேன்” என்றும், அச்செயல் தனக்கோ பிறர்க்கோ ஒருபயனும் விளைவியாமையால், தன்னை “விழலனேன்” என்றும் மனம் கசந்து மொழிகின்றார். நுகம் - உழு கலப்பையில் மாடுகளைப் பிணிக்கும் மரத்தடி. நுகத்தடியென்றோ நுகமென்றோ கூறாமல் “நுகப்படை” என்பதனால் கலப்பையொடு பிணிக்கப்பட்ட நுகம் என்று கொள்க. நுகப்படை தாக்கி யுந்து மிடத்து எதிர் நிற்கும் பொருள் சாய்ந்து சிதைந்தொழிவதால், “உழுகின்ற நுகப்படை கொண்டு உலையத் தள்ளி உழக்கினும்” என்று இசைக்கின்றார். உலைதல் - துன்புறல். உழக்குதல் - துண்டு துண்டாய்ச் சிதைத்துக் கெடுத்தல். உறுக்குதல் - அளவுக்கு மேலாகப் பிணிப்பது. மீன் பிடிக்கும் படகுகளில் உள்ள கட்டைகளை “நெருங்க உறுக்கி இறுகக்கட்ட” வில்லை என்று மீனவர் வழங்குவது காண்க. திருவொற்றியூர்க் கடற்கரையில் மீனவர் மிகப்பலர் வாழ்தலின், வள்ளலார்க்கு இவ்வழக்கு இனிது பயின்றிருந்தது. நிலத்திடை வீழ்த்தி உழக்குதலும் கடலிடை வீழ்த்தலும் ஒறுத்தல் வகை:
இதன்கண், இறைவன் திருவடியைத் தொழாத குற்றம் நினைந்தும் வீண்வாதச் சூழலிற் புக்கிருந்த குற்றம் உரைத்தும் வருந்துமாறு காண்கின்றோம்.. (6)
|