1376. விருப்பாகும் மதிச்சடையாய் விடையாய் என்றே
மெய்யன்போ டுனைத்துதியேன் விரைந்து வஞ்சக்
கருப்பாயும் விலங்கெனவே வளர்ந்தே நாளைக்
கழிக்கின்றேன் கருநெஞ்சக் கள்வ னேனைப்
பொருப்பாய யானையின்கால் இடினும் பொல்லாப்
புழுத்தலையில் சோரிபுறம் பொழிய நீண்ட
இருப்பாணி ஏற்றுகினும் அன்றி இன்னும்
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
உரை: கண்டார்க்கு விருப்பம் விளைவிக்கும் பிறை மதியணிந்த சடையுடையவனே என்று மெய்யன்புடன் உன்னைத் துதியாமல் விரைந்தோடி, வஞ்சமாய், இளம் பயிர் நின்ற நன்செய் வயற்குட் பாய்ந்து மேயும் எருமை முதலிய விலங்குபோல வளர்ந்து வாழ்நாளைக் கழிக்கின்றேன்; கரிய நெஞ்சு படைத்த கள்வனாகிய என்னை மலை போன்ற யானையின் கால்களில் மிதிப்புண்ணும்படி இட்டாலும், பொல்லாப் புழுக்கள் மிக்குற்ற புண் தலையில் குருதி புறத்தே வழிந்தொழுக நீண்ட இருப்பாணியை யடிக்கினும், அன்றி வேறு யாது செய்யினும், எந்தாய், என் குற்றத்துக்கு ஏற்ற தண்டனையாகாது, காண். எ.று.
தலைக்கண்ணி போலப் பிறைத்திங்கள் தங்கி யழகுசெய்யும் திருச்சடையின் பொலிவு, கண்டார்க்கு மிக்க விருப்பத்தை யுள்ளத்தே பெருக்குதலால், “விருப்பாகும் மதிச் சடையாய்” என்று விளம்புகின்றார். விடை அப்பெருமானுக்குக் கொடியும் ஊர்தியுமாதலின், பொதுப்பட “விடையாய்” என்று இயம்புகின்றார். எருதினை இகழாமல் ஊர்தியாகவும் கொடியாகவும் சிறப்பித்ததையும், தேய்ந்து சிறுகும் பிறைத்திங்களைப் புறக்கணியாமல் சடையிற் கொண்டதையும், கண்டவிடத்து உள்ளத் தெழும் உழுவலன்புடனே மெய்யாகச் சிவனைப் பணிந்து பரவுவது கடனாக இருக்க, அது செய்யாமல், சிறிதும் தாமதமின்றி, விளைவயற்குள் வஞ்சனையாகப் புகுந்து மேய்ந்தழிக்கும் எருமையாகிய விலங்கு போல, உற்றார் மனைக்குள் விரைந்து புகுந்து அவரை வஞ்சித்துப் பொய்கூறி உண்பனவுண்டு நெடிது வளர்ந்து காலம் கழிக்கின்றேன் என்பாராய், “விரைந்து வஞ்சகக் கருப்பாயும் விலங்கெனவே வளர்ந்து நாளைக் கழிக்கின்றேன்” என்று கூறுகின்றார். இரவுப் போதில் கொம்பினால் வேலியை நீக்கி வயலில் வளர்ந்திருக்கும் இளம் பயிரை மேய்வது எருமைக்கு இயல்பு; அதனை எருமை யென்னாது அறிவிலாமை புலப்பட, “வஞ்சக் கருப்பாயும் விலங்கு” எனக் குறிக்கின்றார். கரு - இளம் பயிர். கருப்பாயும் என்பதற்குக் கரும்புப் பயிரை மேயும் என்றும், கரும்பிற் பாயும் என்பது கருப்பாயும் என வந்தது எனினும் கொள்க. கருநெஞ்சம் என்பதில் கருமை, களங்க நினைவுடைமை. “களவு என்னும் காரறிவு” (குறள்) என்றவிடத்துக் கருமை, தீச் செயலாகிய களவினைச் சூழ்ந்து செய்தற்குத் துணையாகும் அறிவின் மேனின்று, அதற்குளதாகும் களங்கத்தைக் குறிப்பது காண்க. களவு செய்தல் காரறிவாண்மையாதலின், அதற்கு உரிய தீயன சூழும் நெஞ்சினைக் கருநெஞ்சு என்றார் என்றுமாம். பொருப்பாய யானை என்ற விடத்து ஆக்கவினை உவமப் பொருட்டு. யானையின் காலில் இடறச் செய்தல் முன்னைக் கால அரசுகள் செய்த தண்டனை வகையில் ஒன்று; மேலை நாட்டவர் அரிமாவை விட்டுக் கொன்று தின்னச் செய்வதைத் தண்ட வகையாகக் கொண்டிருந்தனர். புண்ணுற்றுப் புழுத்திருப்பதே தலைக்குப் பெருநோயாகும்; அதன்கண் இருப்பாணியை அடிப்பது மிகக்கொடிய கொலைத் தண்டனையாகும்.
இதன்கண், சிவனை மெய்யன்புடன் துதியாத குற்றத்துக்காக யானைக் காலிலிட்டு இடறிடச் செய்தலும், இருப்பாணியைத் தலையில் அடித்தலுமாகிய தண்டனை கொடுப்பதும் நிரம்பா என்பதாம். (7)
|