1377. அக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன்
ஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன்
மிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல்
வீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச்
செக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ
திருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும்
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
உரை: கண் பொருந்திய நெற்றியும், பிறை தங்கிய சடையுமுடைய சிவபெருமானே, நின்னுடைய திருவடியை வழிபடாமல் ஆண் பனைமரம் போல மிக நீண்டுவளர்ந்துள்ளேனாயினும், அறிவு சிறிது மில்லாதவனாவேன். ஒதி மரம் போல் மிகவும் பருத்திருப்பதுடன், வலிய கடாமாடு போல வீண்செயல்களிற் புகுந்து அல்லற் படுகின்றேன்; இவ்வாறு வீணனாகிய என்னைச் செக்கிடையிட்டு உடல் நசுங்கிச் சிதைந்து குழம்பாகுமாறு திருப்பித் திருப்பி ஆட்டினாலும், இருப்பாணிகளை உள் நோக்கி முள்போலத் தைத்த பெட்டியில் வைத்து நாற்புறமும் நெருங்குமாறு சேர்த்து மண்மேட்டில் வைத்து உருட்டினாலும், இது போல் வேறு யாது செய்யினும், எனக்குரிய தண்டனை, எந்தையே, நிரம்பாது காண். எ.று.
கண்ணைக் குறிக்கும் 'அக்கம்' என்ற சொல் வடசொற் சிதைவு; அக்கநுதல், கண்ணுதல் எனத் தமிழில் வழங்கும். நெற்றிக்கண் ஞானத்தையும் பிறைத்திங்கள் அருளையும் நோக்குவது பற்றி, வழிபடுவோர் இரண்டையும் எடுத்தோதிப் பாராட்டுவது பெரும்பான்மை வழக்கு. அதனால் வள்ளலாரும் “அக்கநுதற் பிறைச் சடையாய்” என்று வழுத்துகின்றார். திருவடியை ஏத்துவது கடனாகவும் அது செய்யாத குற்றத்தைக் கூறுகின்றாராதலால், “நின்றாள் ஏத்தேன்” என்றும், ஏத்தாமற் செய்தன இவை என்பார் காலந்தோறும் வயிறு புடைக்க உண்டு, உயரமாக வளர்ந்தமை குறித்தற்கு, “ஆண் பனைபோல் மிக நீண்டேன்” என்றும், உயரமாக வளர்ந்தும் அறிவு வளராமல், உடல் குறுக்காக வளர்ந்து ஒதி மரம்போல் பருத்தமை கூறுவாராய், “அறிவொன்றில்லேன் மிக்க ஒதிபோல் பருத்தேன்” என்றும் உரைக்கின்றார். நெடிதுயர்ந்தும் மிகப்பருத்தும் அறிவு வளராமை காட்டற்கு “அறிவு ஒன்றில்லேன்” என்றவர், கரிய எருமைக்கடாப்போல் பயனற்ற செயல் புரிந்தேன் என்பாராய், “வீண் கருமத் துழன்றேன்” என்றும் சொல்லுகின்றார். அவ்வா றொழிந்ததற்குக் காரணம் யாதாகலாம் என நினைந்து, பயனிலாத் தன்மை தன்பால் இருப்பது கண்டு, “விழலனேன்“ என வெறுத்துரைக்கின்றார். அறிவறியும் மகனாகப் பிறந்து வளர்ந்த தான், இறைவன் திருவடிப் பெருமையை அறிவதும், அறிந்து வழிபடுவதும் முறையாகச் செய்யா தொழிந்தது கழுவாயில்லாத குற்றமாதலைக் காண்கின்றார் நெஞ்சிற் சினத் தீ எழுகிறது. இக்குற்றத்துக்குத் தக்காங்கு நாடித் தண்டம் செய்தல் முறையென்று உணர்கின்றார். தண்ட வகைகளையும் எண்ணுகின்றார். செக்கு என்பது, எட்பெய்து ஆட்டி எண்ணெய் எடுக்கும் எந்திர வகை; “கரும்பின் எந்திரம்” போல. அத்தகைய செக்கில் தம்முடம்பையிட்டு ஆட்டுதல் வேண்டும் என்பார், “செக்கு இடைவைத்து உடல் குழம்பிச் சிதையத் திருப்பிடினும்” என்று இயம்புகின்றார். ஒரு முறைக்குப் பன்முறை திருப்பித் திருப்பி ஆட்டுதல் வேண்டும் என்றற்குத் “திருப்பிடினும்” என்று செப்புகின்றார். இருப்பறை - உட்புறம் முட்போலமையை இருப்பாணிகள் அறையப்பட்ட பெட்டி. அதனுள் உடலை வைத்துப் புறத்தும் மேலும் கீழுமுள்ள ஆணியறைந்த பலகைகள் சேர நெருங்குமாறு இறுக்கி, மண்மேட்டில் பள்ளம் நோக்கி ஓட உருட்ட வேண்டும் என்ற கருத்தை “இருப்பறை முட்சேரச் சேர்த்து எக்கரிடை யுருட்டுகினும்” என்று இசைக்கின்றார். எக்கர் - மணல் மேட்டுக்கு மாயினும் ஈண்டு மண்மேடே குறிப்பதாகக் கொள்க.
இதன்கண், இறைவன் திருவடியை வாழ்த்தி வணங்காமல் பனை போல் உயரமாகவும் ஒதிபோற் பருமனாகவும் வளர்ந்து வீண் கருமம் செய்துழன்ற குற்றம் நினைந்து வருந்துமாறு பெற்றாம். (8)
|