1378.

     அன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை
          அறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத்
     துன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத்
          தொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன்
     வன்பறநின் தலைவணங்காத் தலையை அந்தோ
          மடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை
     இன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி
          என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

உரை:

      எந்தையே, நின்னுடைய திருவடியை அன்புடன் புகழ்ந்தோதாத பாவியாகிய எனது நாவை எஞ்சாமல் அறுக்கின்றேனில்லை; நின்னுடைய பேரழகை விருப்புடன் காணாமல் துன்பம் தரும் கண்ணிரண்டையும் பிடுங்கி எறிகிலேன்; நின்னைத் தொழாதொழிகின்ற கைகள் இரண்டையும் வாளால் வெட்டித் துண்டமாக்கா தொழிகின்றேன்; வன்பு கெடுமாறு நின்னை வணங்காத தலையை அறுத்தெறிகிலேன்; ஒதி மரம்போல் வளர்ந்துள்ள என்னை நோய் செய்கின்ற வல்லெரியில் வீழ்த்தினாலும், அல்லது வேறு எத்தகைய வதைசெய்தாலும் என் குற்றத்துக்குப் போதிய தண்டனை யாகாது, காண். எ.று.

     இறைவன் திருவடிக்கண் அன்புண்டானா லன்றிப் புகழ மனம் செல்லாதாகலின், உள்ளன்புடன் புகழாமையின், பாவியென்று தம்மையே தூற்றுவாராய், “அன்புடன் நின்பதம் புகழாப் பாவி” என்றும், அப்பாவத்துக்குக் கழுவாயாக நாவைத் துண்டிப்பது மேல் என்பாராய், “நாவை அறத்துணியேன்” என்றும் கூறுகின்றார். துணிதல் - துண்டாக அறுத்தல். பொருள்களை நன்கு காணவல்ல கண் பெற்றவன், இறைவன் திருமேனி யழகைக் குறைவறக் கண்டு இன்புறற்பாலன்; அது செய்யாது வேறு பொருள்களைப் பார்த்துத் துன்பம் எய்துவித்துக் கொண்டதனால், அக் குற்றம்பற்றி இரு கண்களையும் அகழ்ந்தெடுத் தெறிய வேண்டும்; ஆனால் அதனைச் செய்யவில்லை என வருந்தலுற்று, “நின் அழகை அமர்ந்து காணாத் துன்புறு கண்ணிரண்டினையும் சூன்றேன்” என்று சொல்லுகின்றார். அமர்ந்து காண்டல் - விருப்புடன் இருந்து காண்பது. காண்டலால் இன்பம் தரற்பாலவாகிய கண்கள், ஆகாதவற்றைக் காட்டி மனத்துக்குத் துன்பம் தருவதால், “துன்புறு கண்” என்று சுட்டி யுரைக்கின்றார். சூன்றிடுதல் - அகழ்ந்தெடுத் தெறிதல். துண்ட மாக்குதல் - துண்டாய் வெட்டி வீழ்த்தல். இறைவன் திருவடியை அன்புற வணங்குதற்குரிய தலை, வணங்கா தொழிதற் கேது மறுதலையாகிய வன்பு மனத்திற் செறிவதாதலின், “வன்பற நின்றனை வணங்காத் தலை” என வுரைக்கின்றார். மடித்தல் - ஈண்டு அறுத்தெறிதல். வல்லெரி - பெருங்கட்டைகளைப் பெய்து எரிக்கும் நெருப்பு. அதன்கண் வீழ்ந்தார் வெவ்வியதுன்பமல்லது இன்பமுறாராதலால் “இன்பறு வல்லெரி” என இசைக்கின்றார

்.      இதன்கண், இறைவனைப் புகழாத நா, காணாத கண், தொழாத கை, வணங்காத தலை ஆகிய இவற்றை உடைமையால் ஆய குற்றத்திற்கு வருந்தியவாறு காணலாம்.

     (9)