138.

    பேயு மஞ்சுறும் பேதை யார்களைப்
        பேணுமிப் பெரும் பேயனேற் கொரு
    தாயு மப்பனும் தருமம் நட்புமாய்த்
        தன்னருட் கடல்தந்த வள்ளலே
    நீயும் நானுமோர் பாலு நீருமாய்
        நிற்க வேண்டினே னீதியாகுமோ
    சாயும் வன்பவம் தன்னை நீக்கிடும்
        சாமியே திருத் தணிகை நாதனே.

உரை:

     துன்பத்தால் மெலிவிக்கும் வலிய பிறப்பை அறுத்தொழிக்கும் சாமியே, திருத்தணிகை நாதனே, பேயும் கண்டு அஞ்சத் தக்க பேதைகளைப் போற்றிக் கூடி யொழுகும் பெரும் பேயனாகிய எனக்குத் தாயும் தந்தையும் சுற்றத்தாரும் நண்பருமாய் நின்று தண்ணிய அருளாகிய கடலை வழங்கிய வள்ளலே, நீயும் நானும் பாலும் நீரும் போலக் கூடியிருப்பதை விரும்புகிறேன்; அது முறையாகுமா? கூறியருள்க, எ. று.

     சாய்தல் - மெலிதல்; ஈண்டுப் பிற வினையாய்ச் சாய்விக்கும் என்னும் பொருளில் வந்துளது. பவம் - பிறப்பு. வினைத் தொடர்பறும் வரையில் உயிரை விடாது தொடர்தல் பற்றி “வன்பவம்” எனப்படுகிறது. திருவருள் ஞானத்தால் உய்தி நல்கிப் பிறவி வேரை யறுக்கின்றமை பற்றி, “வன்பவம் தன்னை நீக்கிடும் சாமியே” என்று பரவுகின்றார். ஆசை வகைகளால் பிடிப்புண்டு பொறி வழித் திரிந்து பேதைமையுற்று அலைவது பற்றிப், “பேயும் அஞ்சுறும் பேதையார்” என்றும், அவர் இனத்தை விரும்பிச் சார்ந்து அவர் போல் அலையுமாறு புலப்படப் “பேணும் இப்பெரும் பேயனேன்” எனத் தம்மைப் பழித்தும் பேசுகின்றார். பேதையர் பேய்த்தன்மையில் அப்பேயினும் மிக்கோராக, அவரினத்திற் சேர்க்கப் படுதலான் தன்னை யிழித்துப் “பெரும் பேயனேன்” எனக் கூறுகிறார். பேதைமையால் பேதையார் இனம் சார்ந்து பேய்த் தன்மை மிக்குப் பெரும் பேயனே னாயினும் என்னையும் பொருட் படுத்தி எனக்குத் தாயும் தந்தையும் உறவும் நட்புமாய் அருள் புரிந்தது, கடல் போற் பெருகி நிற்கும் நின் பேரருள் வள்ளன்மையை யுணர்த்துகிறது என்பாராய்ப் “பேயனே கொரு தாயும் தந்தையும் தமரும் நட்புமாய்த் தண்ணருட் கடல் தந்த வள்ளலே” என்று போற்றுகின்றார். நான் உன்னைச் சார்ந்து பாலொடு சேர்ந்த நீர் போல் பண்பொத்து நிற்க விரும்புகிறேன் என வேண்டுவாராய், “நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன்” என்றும், அது தக்கது தானா? தகுவதாயின் தந்தருள்க என்பாராய், “நீதியாகுமோ” என்றும் வேண்டுகின்றார். பாலொடு கலந்த நீர் நிறத்தால் ஒன்றித் தோன்றினும் நீர் நீரே; பால் பால்தான்; நீர் பாலாவதில்லை; பால் நீராவது மில்லை; அது போல் சிவத்தொடு கூடிச் சிவமாயினும், சிவம் வேறே; உயிர் உயிரே; சிவம் சிவமாய்த் திகழும்; சிவமாம் தன்மை யெய்திய உயிர் “சிவானுபவம் ஒன்றினுக்கு உரித்தாம்” என வுணர்க. “மெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயுமவன்” (கழுமலம்) என்று திருஞானசம்பந்தரும், இதனைத் “தன்னைக் கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்” (பொன்வண்) என்று சேரமான் பெருமாளும் தெளிய வுரைப்பது காண்க. “மாலின் வாழ்க்கையில்” (140) என்ற திருப்பாட்டில் “பாலின் நீரென நின்னடிக்கணே பற்றி வாழ்ந்திடப் பண்ணுவாய் கொலோ” என்று வடலூர் வள்ளல் இக்கருத்தை வற்புறுத்துவது காண்க.

     இதனால், சைவத் திருமுறைகள் தெரிவித்தருளும் முத்தி நலம் பாலொடு கலந்த நீர் மேல் வைத்து விளக்கம் செய்வது காணலாம். இதனை யறியாது வேறுபடும் சைவர்களை எண்ணி இரக்கமே கொள்ளல் வேண்டும்.

     (8)