1381.

     மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால்
     கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும்
     தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால்
     ஒட்டுப் படாததொன்று ண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.

உரை:

      பெரிய வேதங்களாலும் வரையறுக்க வொண்ணாததும், மலமெனப்படும் பகைப்பொருளால் பிணிக்கப் படாததும், திருமால் பிரமனாகிய தேவர்களின் அறிவுக் கெட்டாததும், நில முதலாகிய பூத தத்துவத் தடைகளால் விலக்குண்ணாததுமாகிய ஒன்றாயுள்ள பரம்பொருள், முக்கண்ணுடன் கூடி என் மனத்தின்கண் உளது, காண். எ.று.

     மட்டு - வரையறை; அளவுமாம். வேதங்களாலும் சிவபரம்பொருள் அளக்க வொண்ணாதது என்பதை “எண்குணங்களும் விரும்பும் நால்வேதத்தாலும் அறிவொண்ணா” (முதுகுன்றம்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. மலமாயை கன்மங்களாகிய தடைகள் உயிர்களைப் பிணிப்பது போல சிவன்முன் ஒளி முன்னிருளாய் நில்லா தொழிவன வாதலால், “மலப்பகையாற் கட்டுப் படாதது” என வுரைக்கின்றார். சிவபரம் பொருட்குத் திருமால் பிரமன் முதலிய தோற்றங்கள் அறிவாற்றலாற் பிற்பட்டவை யாதல் பற்றி “மால் ஆதியர் கருத்தினுக்கும் தட்டுப் படாதது” என்கிறார். “நாற்றமிகு மாமலரின் மேலயனு நாரணனும் நாடி ஆற்றலதனால் மிக அளப்பரியன்” (தோணி.) என ஞானசம்பந்தர் கூறுவர். நிலமுதற் பூதங்கள் அறிவில்லாத அசேதனங்களாதலால் அவற்றால் இறைவன் தாக்கப் படாமை விளங்கப் “பூதத் தடைகளினால் ஒட்டுப்படாதது” என உரைத்தருளிப் பரம்பொருளாம் தன்மை பற்றி, “ஒன்று” என மொழிகின்றார்.

     இதனாற் சிவபரம் பொருளின் மேலாம் தன்மை உரைத்தவாறாம்.

     (2)