1382.

     பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும்
     சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால்
     ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும்
     ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே

உரை:

      உலக நிலைகளால் வேறுபடாததும், பற்பல கால கற்பங்கள் கழிந்தாலும் கெடுவதில்லாததும், நலம் தீது எனப்படும் செயல் வகைகளால் குற்றப்படுவதில்லாததும், உள்ளத்தால் எட்டிக் காண முடியாததும், யாவராலும் ஓதி யுணர முடியாததுமாய், ஒன்றாய் உள்ள பரம் பொருள் முக்கண்களுடன் என் மனத்தின் கண்ணே உளது. எ.று.

     மேல் கீழ் நடுவென உலகங்கள் நிலை வேறுபடினும், ஆண்டுகள் யுகங்கள் கற்பங்கள் என்ற காலவகைகளால் தாக்கப்படினும் தன்மை வேறுபடாமை விளங்க, “பேதப்படாதது” எனவும், பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும் சேதப்படாதது எனவும் இயம்புகிறார். காலம் கூறியதால் இயைபுபற்றி இட வேறுபாடு வருவிக்கப் பட்டது. கற்பம், பல கோடி யுகங்கள் கொண்டது என்பர். ஆக்கம் அழிவு எனச் செயல் இரண்டாதலாலும், அவற்றாற் பொருள்கள் புதுமை மாறித் தேய்வும் ஒளிக் குறைவு மெய்துவது பற்றி, 'சேதப்படாதது' எனவும், “நன்றிது தீதெனச் செய்கைகளால் ஏதப்படாதது” எனவும் கூறுகிறார். ஏதம் - குற்றம். சிதைவு - குறைவு. இந்நாளில் புதிய புதியவாய் அறிந்து ஆக்கப்படும் பொருளுண்மைபோல அறியப்படாமை விளங்க “எட்டப் படாதது இங்கு” எனவும், எத்துணை நுண்ணறிவுடையோராலும் இது காறும் காணப் படாமைமை பற்றி, “யாவர்க்கும் ஓதப்படாதது” எனவும் இசைக்கின்றார்.

     இதனாற் சிவபரம் பொருள் எட்டவும் சுட்டியறியவும் படாமை யுரைத்தவாறாம்.

     (3)