75. வடிவுடை மாணிக்கமாலை

காப்பு

கட்டளைக் கலித்துறை

1385.

     சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி
     வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத்
     தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே
     ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே.

உரை:

      சீர் பொருந்திய திருவொற்றியூரையுடைய தியாகப் பெருமானது இடப்பாகத்தில் அமர்ந்த, மணிவடம் தவழ்கின்ற கொங்கைகளையுடைய வடிவாம்பிகையின் தாமரை மலர்போன்ற திருவடிகட்குத் தார்போன்ற செந்தமிழ்ப் பாக்களாலாகிய மாலை தொடுத்தணிதற் பொருட்டு, அடியேனுக்கு உயர் குணங்களெல்லாவற்றிற்கும் உறைவிடமாகிய ஏரம்ப விநாயகர் முட்டின்றி முடிய நல்லருள் செய்வாராக என்றவாறு.

     ஒற்றிப்பதி - திருவொற்றியூர்; இப்போது சென்னை மாநகரின் வட பகுதியாகவுளது. இங்கே கோயில் கொண்டுறையும் சிவபெருமானுக்கு இவ்வூர் முற்றும் உடைப்பொருளாகலின், அப்பெருமானை “ஒற்றிப்பதியுடையான்” என்று உரைக்கின்றார். இவ்வூர் சிவனுக்கு முற்றூட்டென்பதை இவ்வூர்க் கல்வெட்டுக்கள் பல எடுத்துரைக்கின்றன. இடம் சேர்ந்த வடிவாம்பிகை என்றும், கொங்கை வடிவாம்பிகை என்றும் இயையும். இடப்பாகத் தமர்ந்தவளாதலால் “இடம் சேர்ந்த வடிவாம்பிகை” என்கின்றார். “மணிவார்” என்றது, மணிகள் கோத்த நீண்ட மாலை என அறிக. வடிவாம்பிகை, திருவொற்றியூரில் அம்பிகைக்குப் பெயர். திருநாவுக்கரசர், “வடிவுடைய மங்கை” என்று தாம் பாடிய திருத்தாண்டகத்தில் குறித்து ஓதி வழிபட்டதனால் இப்பெயர் வழங்கி வருகிறது. இதனை வடிவாம்பிகை, வடிவாம்பாள், வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம் எனப் பலபெயர்களாக மாற்றி இங்கே வாழ்கின்ற மக்கள் அம்பிகையைக் குறித்து வழிபடுவதுடன், பெண்மக்கட்குப் பெயரிட்டும் போற்றுகின்றார்கள். தார் - மார்பில் அணியும் மாலை. தமியன் - தமியாகிய இறைவனைத் தனக்குள் உடையவன். உயிர்த்தொகையனைத்தையும் அடிமையாகக் கொண்டமைபற்றி இறைவனைத் தமி என உரைப்பர். தம்மையுடையது தமி. பெற்றவர்க்கு எழுச்சி பயத்தல் பற்றி, அருளை, “ஏர் கொண்ட நல்லருள்” எனச் சிறப்பிக்கின்றார். ஏரம்பன், விநாயகருக்குள்ள பெயர் பலவற்றுள் ஒன்று.

     வடிவாம்பிகை மலரடிக்குச் செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கு ஏரம்பன் நல்லருள் ஈயும் என முடிக்க.