நூல

நூல்

1386.

     கடலமு தேசெங் கரும்பே
          அருட்கற் பகக்கனியே
     உடல்உயி ரேஉயிர்க் குள்உணர்
          வேஉணர் வுள்ஒளியே
     அடல்விடை யார்ஒற்றி யார்இடங்
          கொண்ட அருமந்தே
     மடலவிழ் ஞான மலரே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      வடிவுடை மாணிக்கமே, கடலிற் பிறந்த அமுதமும் செங்கரும்பும் அருளாகிய கற்பகக்கனியும் ஆவாய்; உடற்குள் உறையும் உயிராயும் உயிர்க்குள் நிலவும் உணர்வாயும், உணர்வின்கண் திகழும் ஒளியாயும் உள்ளவள்; வெற்றியையுடைய விடையேறும் திருவொற்றியூர்ப் பெருமானது இடப்பாகத்தைக் கொண்ட பெறலரும் மருந்து போல்பவள்; இதழ் விரிந்த ஞான மலராய் விளங்குபவள். எ.று.

      தேவர்கள் கடலைக் கடைந்து பெற்ற, உண்டாரைச் சாவாமல் நெடிது வாழச் செய்வதும் சுவைமிக்கதும் ஆகிய உண்பொருள் 'கடல்அமுது' என்று புராணிகர் கூறுவர். கொழுந்தென்று தள்ளப்படாமல் எங்கும் எப்போதும் இனிக்கும் செம்மையுடைய கரும்பு, செங்கரும்பு. திருவருளாகிய நிலத்தில் வளர்ந்த கற்பகமரத்தின் கனியை “அருட் கற்பகக் கனி” என்று கூறுகின்றார். அருட்கனி எனவும், கற்பகக் கனி எனவும் பிரித்துக் கொண்டுரைப்பினும் அமையும். உடலுக்கு உணர்வும் ஒளியும் செயற்றிறமும் நல்குவதுபற்றி உயிர் சிறப்புமிக்குடைமை விளங்க, “உடல் உயிரே” என்றும், உணர்தலும் உணர்த்தலும் இனிது செய்விப்பது பற்றி, “உயிர்க்குள் உணர்வே” என்றும், உயிருணர்வுக்கு ஒளி தந்து உலவுமிடமெங்கும் ஒளிரச்செய்தலால் “உணர்வுள் ஒளியே” என்றும் உரைக்கின்றார். திருவொற்றியூர் இறைவன் வெற்றிமால் விடையேறும் பெருமானாதலின், “அடல்விடையார் ஒற்றியார்” எனவும், உலகிடையுயிர்கள் உண்ணும் உணவு ஆற்றலாய் மாறி உடலை அறிவுக்கும் செய்கைக்கும் உரிய இனிய கருவியாமாறு செய்தற்பொருட்டு இறைவனது இடப்பாகம் கொண்ட குறிப்புத் தோன்ற, “இடம் கொண்ட அருமருந்தே” எனவும் இயம்புகின்றார். எய்திய நோயைத் தன் ஆற்றலால் எதிர்த்தழிப்பதும், எதிர்த்தழிக்கும் ஆற்றலை உடற்களித்து நோயைத் தகர்ப்பதும் மருந்தின் அருமைத் தொழிலாதலால் அருமருந்து எனப் பாராட்டுகின்றார். ஞானமே வடிவாய் மலர்போல் மென்மையும் மணமும் உடைமை கருதி அம்பிகையை “மடலவிழ் ஞான மலரே” எனப் புகழ்கின்றார். “ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெட எண்ணில் ஞானமா மலர் கொடு நணுகுதல் நன்மையே” என்பர் ஞானசம்பந்தர்.

     இதனால், ஆர்வமிகுதி பற்றி வடிவாம்பிகையை இனிய சொற்களால் பாராட்டி வாழ்த்துவது காணலாம்.

     (1)