1387.

     அணியே அணிபெறும் ஒற்றித்
          தியாகர்தம் அன்புறுசற்
     குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ
          மேமலைக் கோன்தவமே
     பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட
          தெய்வப் பதிகொள்சிந்தா
     மணியேஎன் கண்ணுண் மணியே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      பொருள்கட்கு அணி தருபவளே, அணிபெறும் ஒற்றிநகர்த் தியாகேசரது அன்பு பொருந்திய சற்குண வடிவானவளே, மலையரசன் செய்த தவப்பயனாய் விளங்குபவளே, நின் தாளைப் பணியாதொழிந்த என் பிழையைப் பொறுத்து ஆட்கொண்டுவந்த தெய்வப் பதியினர் போற்றிக் கொள்ளும் சிந்தாமணியே, என் கண்ணினுள் விளங்கும் மணி போல்பவளே, வடிவுடை மாணிக்கமே. எ.று.

     இறைவன் படைப்பினுள் உருக்கொண்டமைந்த அனைத்துக்கும் அழகு தருபவளாதலால் அம்பிகையை “அணியே” எனப் புகழ்கின்றார். “பிறர்க்கணி படுக்கு மாற்றால் அணியெனும் பெயர்” (வள். திருமண. 148) என்று கச்சியப்ப முனிவர் கூறுவர். உருவும் அருவுமாகிய பொருளிடத்தேயிருந்து சத்தியாகிய தேவி நல்கும் அணியைப் பெறுவது பற்றிச் சிவனை, “அணிபெறும் ஒற்றித் தியாகர்” என்று சிறப்பிக்கின்றார். பல்வகை வளம் நிறைந்து அழகுபெறும் ஒற்றிநகரை “அணி பெறும் ஒற்றி” என்றார் எனலுமாம். எப்பொருளிடத்தும் அன்புகொண்டருளும் சத்தாகிய மெய்ம்மைக் குணமனைத்தும் தன்பால் உடைமை விளங்கச் “சற்குணியே” என்று பரவுகின்றார். உலகில் வாழ்க்கை நடத்தும் நமக்கெல்லாம் தெய்வமாய்க் காப்பளிப்பவளாதலால், “எம் வாழ்க்கைக் குல தெய்வமே” என்று உரைக்கின்றார். மலையரசன் செய்த தவத்தின் பயனாய் அவற்கு மகளாய்ப் பிறந்த பெருமை பிறங்க “மலைக்கோன் தவமே” என்று கூறி மகிழ்கின்றார். அம்பிகையின் அருளுருத் தன்மையறியாது பணியா தொழிந்த குற்றத்தை நினைந்து மன்னித்தல் வேண்டி எடுத்துரைப்பதுபற்றிப் “பணியேன்” என்றும், எனினும் பிழை பொறுத்து ஆட்கொண்ட அருள்மிகுதியை வியந்து, “பிழை பொறுத்தாட்கொண்ட சிந்தாமணியே” என்றும் சிறப்பிக்கின்றார். சிந்தாமணி தேவர் கோன் தலைநகரத்து மணிகளில் ஒன்றாயினும், அதன் பண்பனைத்தும் தன்கண் கொண்டமை விளங்கத் “தெய்வப் பதிகொள் சிந்தாமணி” என்று உரைக்கின்றார். அகன்ற கண்ணாயினும் உள்ளே கருமணியில்லையாயின் பயனில்லையாதலால், காணும் கண்ணுக்குக் காட்சிதந்து அறிவும் ஒளியும் தரும் சிறப்புப் பற்றி “என் கண்ணுள் மணியே” என்று வாயாரப் புகழ்கின்றார்.

     இதன்கண், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை உலகுயிர்கட்கு அணியாயும், தியாகேசர்க்குரிய சற்குணி யாயும், மலையரசன் தவப்பயனாயும் விளங்கி, உயிர்த்தொகைகளின் பிழை பொறுத்தருளும் பெருமாட்டி என்று புகழ்ந்துரைத்தவாறாம்.

     (2)