1388. மானேர் விழிமலை மானேஎம்
மானிடம் வாழ்மயிலே
கானேர் அளகப் பசுங்குயி
லேஅருட் கட்கரும்பே
தேனே திருவொற்றி மாநகர்
வாழும் சிவசத்தியே
வானே கருணை வடிவே
வடிவுடை மாணிக்கமே.
உரை: மான்போன்ற கண்களையுடையளாய் மலையரசன் மகளாய் மான்போன்று இயல்பவளே, எமது பெருமானாகிய சிவனுடைய இடப் பாகத்தில் வாழ்கின்ற மயிலே, நறுமணம் கமழும் கூந்தலையுடைய பசுமையான குயில் போல்பவளே, அருளொழுகும் கண்ணையுடைய கரும்பு போல்பவளே, தேன் போலும் இனிமைப் பண்புடையவளே, திருவொற்றியூர்க்கண் வாழும் சிவசத்தியே, வானாய் மழை தருபவளே, கருணையே உருவாகவுடைய வடிவுடை மாணிக்கமே. எ.று.
மலையரசன் மகளாய் மலையிடத்து வளர்ந்தமை பற்றி “மலைமானே” என்றும், அவள் விழிகள் மான்போன்று அழகு செய்வது பற்றி, “மானேர் விழி” என்றும் உரைக்கின்றார். “எம்மான்” என்றவிடத்து, மான், பெரியவன் என்னும் பொருள் தருவது. இச் சொற்பொருளை வடமொழியாளர் 'மகான்' எனபர். மயில் போன்ற சாயல் உடைமையால் “மயிலே” என்கிறார். கான் - நறுமணம். இயல்பிலே ஞானமணம் கமழும் கூந்தலுடையவளாதலால் “கானேர் அளகப் பசுங்குயில்” என்று புகழ்கின்றார். அளகம் - கூந்தல். குரல் நலத்தில் குயிலையும், மேனி நிறத்தால் பசுமையும் உடைமைபற்றிப் “பசுங்குயில்” என்று பாடுகின்றார். கரும்புக்குக் கண்போல் அம்மைபால் அருள்பெருகு கண்கள் அமைந்தமை கொண்டு, “அருட்கட் கரும்பே” என அறிவிக்கின்றார். வடிவாம்பிகை சிவபெருமானுக்குச் சத்தியெனச் சைவசாத்திரங்கள் உரைத்தலால், “சிவசத்தி” என்று தெரிவிக்கின்றார். கருமுகிலாய் மழைபெய்விக்கின்றவள் என்றற்கு “வான்” என்றும், கருணையின் உருவாய் அமைந்தவள் என்றற்குக் கருணைவடிவே என்றும் இயம்புகின்றார்.
இதன்கண், திருவொற்றியூர் வடிவுடை மாணிக்கம், மயிலும் குயிலும் கரும்பும் தேனும் வானும் கருணையும் உருவாய்ச் சிவசத்தியாவள் என்பதுரைத்த வாறாம். (3)
|