139. பொய்யர் தம்மனம் புகுதலின் றெனப்
புனித நூலெல்லாம் புகல்வ தாதலால்
ஐயநின் திருவருட் கிரப்பங்
கஞ்சி நின்றெனிவ் விஞ்சு வஞ்சனேன்
மெய்ய ருள்ளுளே விளங்கும் சோதியே
வித்திலாத வான் விளைந்த வின்பமே
தையலா ரிருவோரு மேவு தோள்
சாமியே திருத் தணிகை நாதனே.
உரை: திருத்தணிகையில் எழுந்தருளும் நாதனே, மெய்யுணர் வுடைய பெருமக்கள் உள்ளத்தின்கண் நின்று விளக்கம் புரியும் அருள் ஒளியே, காரணமாகிய முதல் இல்லாமலே மேலுலகின் பயனாய் நுகரப்படும் இன்பமே, வள்ளி தெய்வயானை என்ற இரு மங்கையர் காதலித் தொழுகும் தோள்களையுடைய சாமியே, தூயவாகிய மெய்ந்நூல் தொகுதி யெல்லாம் ஒரு முகமாக, பொய்யையே மேற்கொண்டு திரியும் கீழ்மக்கள் மனத்தின்கண் நீ தோன்றுவதில்லை என்று உரைக்கின்றபடியால், ஐயனே நின் திருவருட் சூழலையடைந்து நினது அருள் பெறும் பொருட்டு இரந்து நிற்றற்கு மிகுதியான வஞ்ச நினைவுகள் மறைந்துள்ள நெஞ்சினை யுடையனாகலின் அஞ்சுகின்றேன், எ. று.
அகமும் புறமும் மெய்ம்மையுற்று மெய்யுணர்வு நிறைந்த உள்ளமுடைய மேன்மக்களை, “மெய்ய” ரென்றும், அவர்களுடைய திருவுள்ளத்தின்கண் மெய்ஞ்ஞான வொளியே நின்று திகழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பை யுணர்த்த முருகப் பெருமானை, “மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே” என்றும் கூறுகின்றார். மலமறைப்பால் விட்டு விட்டொளிரும் ஏனை உயிர்ப் பொருளின் அறிவொளி போலின்றி மெய்யுணர் வுடையோர் உள்ளத்தின்கண் இடையறவின்றி நின்று திகழ்வதுபற்றி “உள்ளுளே விளங்கும் சோதியே” என்று வியந்து மொழிகின்றார்; இதனை நக்கீரனார், “ஓவற விமைக்கும் சேண் விளங்கு அவிரொளி” (முருகு) என்று காட்டுகின்றார், இவ்வுலகில் நுகரப்படும் துன்பமும் இன்பமும் வினையாகிய காரணமின்றி எய்துவதில்லை; மேலுலகில் வினை செயல் இல்லாமல் இன்ப நுகர்ச்சியே காணப்படுவதால், “வித்திலாத வான் விளைந்த இன்பமே” என்று உரைக்கின்றார். முருகப் பெருமான் இன்ப வடிவினனாதலால், மேலுலகு அவனை அனுபவிக்கும் திறம் இங்கே குறிக்கப்படுகிறது. வள்ளி நாயகியார் இம்மையுலகத்து மலை நாட்டுக் குறமகள்; தெய்வயானையார், அம்மையுலகத்துக் கற்பக நாட்டுத் தேவமகள். இருமை இன்பமும் முருகன்பால் மேவப்படுதலைக் காட்டற்குத் “தையலார் இருவோரும் மேவுதோள் சாமியே” என்று புகழ்கின்றார். இம்மை யுலகத்துச் செம்மை வாழ்வையே வற்புறுத்தினவராதலாற் சங்கச் சான்றோர் வள்ளி நாயகியாரையே பெரிதும் எடுத்தோதி மகிழ்ந்தனர். பொய்யர் மனம் உள்ளீடு ஒன்றுமின்றி இருளும், மாசேறிய நினைவும் நிறைந்து தூய்மை யின்றி யிருத்தலால், மெய்ம்மை யொளி அவருள்ளத்தின்கண் நுழைவதில்லை என்ற கொள்கை பற்றிப் “புனித நூலெலாம் பொய்யர் தம்மனம் புகுதல் இன்று எனப் புகல்வதாதலால்” என்று வடலூர் வள்ளல் உரைக்கின்றார். நல்லவும் தீயவுமாகிய நினைவுகள் நிறையினும், தீயவற்றை வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டிருப்பதால் உள்ளத்தை, “வஞ்ச நெஞ்சு” எனவும், அது தன்பாலும் இருப்பது தோன்ற, “வஞ்ச நெஞ்சினேன்” எனவும், கெடு பொருளை மடியில் உடையவர், நல்லிடம் புகுதற்கு அஞ்சுவது போல நன்மையே நிலவும் நினது திருமுன் தீநினைவுடைய யான் திருவருளை இரந்து கேட்டற்கு அஞ்சிப் புறத்தே ஒதுங்கி நிற்பேனாயினேன் என்ற கருத்து விளங்க, “ஐய நின் அருட்கு இரப்ப இங்கு அஞ்சி நின்றேன்” எனவும் இயம்புகின்றார். நின்றேன் என்பது நின்றென் எனக் குறைந்து நின்றது செய்யுள் விகாரம். அச்சத்தால் நெஞ்சம் குறுகினமையின் அதனைச் சொல்லும் குறுகிக் காட்டிற்று. விஞ்சு வஞ்சம் - மிக்குள்ள வஞ்ச நினைவு. நூலெலாம் புகல்வது என்பது ஒருமை பன்மைப் பால் மயக்கம். கு, பொருட்டுப் பொருளது.
இதனால், முருகன் திருமுன் திருவருளை இரந்து பெறற்கு நெஞ்சின் வஞ்சம் தடையாகிய செய்தியை வெளிப்பட வுரைக்குமாறு காணலாம். (9)
|