1390.

     திருமாலும் நான்முகத் தேவுமுன்
          னாள்மிகத் தேடிமனத்
     தருமா லுழக்க அனலுரு
          வாகி அமர்ந்தருளும்
     பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம்
          மான்கொளும் பித்தன்மலை
     மருமான் இடங்கொள்பெண் மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      திருமாலும் நான்முகத் தேவனும் முன்காலத்தே அடிமுடி காண்டற்கு மிகவும் வருந்தித் தேடி, மனத்தின்கண் நீங்குதலில்லாத மயக்கம் எய்தியபோது, நெருப்புருவாய்த் தோன்றி அவர் காண இருந்தருளுகின்ற பெருமானும், எங்கட்குரிய மாபெருந்தலைவனும், திருவொற்றியூர்ப் பெருமானும், கையின்கண், ஒரு மானை ஏந்துகின்ற பித்தனும், மலையரசன் மருமகனும் ஆகிய சிவபெருமானது, இடப்பாகத்தையே இடமாகக் கொண்ட பெண்மான் போன்றவள் வடிவுடை மாணிக்கம். எ.று.

     தேவதேவர்களில் ஒருவனாதல் பற்றி, நான்முகனை “நான்முகத் தேவு” என்றும், இருவரும் முறையே திருவடியும் திருமுடியும் காண முயன்று வருந்தின செய்தியை, “முன்னாள் மிகத் தேடி அருமால் உழக்க” என்றும் கூறுகின்றார். வேறு எவ்வகையாலும் மாற்றற்கில்லாத மயக்கம் என்றற்கு “அருமால்” என்று சிறப்பிக்கின்றார். நெருப்புருவாய்த் தோன்றி யுடனே மறையாது நின்றமை விளங்க “அனல் உருவாகி அமர்ந்தருளும் பெம்மான்” என்று இயம்புகின்றார். பெம்மான், பெருமான் என்பதன் திரிபு. தன்னை உணர்ந்தார் உள்ளத்தில் பிற எத்தேவர்பாலும் விருப்புண்டாகாவாறு பித்தேற்றுபவன் என்றற்குப் “பித்தன்” என்கிறார். மகளை மணந்து கொண்ட மகன் மருமான். பெண்மான் போறலின், பெண்மானே எனப் பேசுகின்றார்.

     இதன்கண், திருவொற்றியூர் அம்பிகையான வடிவுடை மாணிக்கம், ஒற்றிப் பெம்மானும் மலைமருமானுமாகிய சிவனது இடம் கொள் பெண்மான் என்பதாம்.

     (5)