1391. உன்னேர் அருள்தெய்வம் காணேன்
மனத்தும் உரைக்கப்படாப்
பொன்னேஅப் பொன்னற் புதஒளி
யேமலர்ப் பொன்வணங்கும்
அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி
ரேஒற்றி யம்பதிவாழ்
மன்னே ரிடம்வளர் மின்னே
வடிவுடை மாணிக்கமே.
உரை: அம்பிகையாகிய வடிவுடை மாணிக்கமே, உனக்கு நிகராக அருள் வழங்கும் தெய்வம் மனக்கண்ணிலும் காண்கிலேன்; உரை காணப்படாத பொன் போன்றவளே, அப்பொன்னிடத்தே தோன்றும் அற்புத ஒளியே, மலர்மேல் உறையும் திருமகள் வணங்கி வழிபடும் அன்னையே, எமது அரிய உயிர்க்கு உயிராய் விளங்குபவளே, ஒற்றியூர்க்கண் இருந்தருளும் மன்னராகிய சிவபிரானது இடப்பாகத்தே விளங்கும் மின்போல்பவளே, வணக்கம். எ.று.
காணப்படும் அழகிய உருவங்களிலும் அமையாத பேரழகுடையவற்றை மனத்தால் நினைத்துக் காண்டலுண்மையின், “உன்னேர் அருள் தெய்வம் மனத்தும் காணேன்” என உரைக்கின்றார். பொன்னைக் கட்டளைக் கல்லில் உரைத்து மாற்றுக் காண்பதுண்டாயினும், அம்பிகையாகிய பொன் உரைக்கு அகப்படாத மாற்றுயர்ந்தது என்பாராய், “உரைக்கப்படாப் பொன்னே” எனவும், அப் பொன்னின் ஒளி ஏனையுலகியற் பொன்னில் திகழும் ஒளியின் மிக்குள தென்றற்கு “அற்புத ஒளியே” எனவும் உரைக்கின்றார். மலர்ப்பொன் - தாமரைப்பூவில் வீற்றிருக்கும் திருமகள், உயிர்க்குயிராய் நின்று உணர்வுக்கின்றியமையாத ஒளியருளுவது பற்றி “ஆருயிர்க்கு ஓர் உயிரே” எனச் சிற்ப்பிக்கின்றார், ஒற்றியம்பதி வாழ் மன் - திருவொற்றியூர்க்கண் வாழும் சிவபெருமான், சிவனை மன்னென்றற்குக் காரணம், மண்ணும் விண்ணுமாகிய உலகவர்க்கு அருள் நெறியும் நடையும் நல்குவது பற்றியாகும். திருநாவுக்கரசர், “வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகி” (ஐயா) என்பது காண்க.
இதன்கண், வடிவுடை மாணிக்கமான அம்மை, பொன்னும் பொன்னின் அற்புதவொளியும், பொன்மகளான திருமகள் வணங்கும் அன்னையும், உயிர்க்குயிரும், ஒற்றிப்பதிவாழ் இறைவன் இடப்பாகத்து வளரும் மின்னுமாய் விளங்குகிறார் என்பதமாம். (6)
|