1392. கண்ணே அக் கண்ணின் மணியே
மணியில் கலந்தொளிசெய்
விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல்
வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே மலைபெறும் பெண்மணி
யேதெய்வப் பெண்ணமுதே
மண்நேயம் நீத்தவர் வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமென்ற பெயர்கொண்டு பிறங்கும் அம்மையே, எங்கட்குக் கண்ணும், அக்கண்ணினுள் மணியுமாய், மணியினுட் கலந்து ஒளிசெய்யும் விண்ணுமாவாய்; இடம் விரிந்த திருவொற்றியூரில் எழுந்தருளும் அண்ணலாகிய சிவனுடைய இடப் பாகத்தில் வீற்றிருக்கும் பெண்மைப் பரம்பொருளே, மலையரசன் பெற்ற பெண்மணியே, தெய்வ மகளிர் எல்லாரினும் சிறந்த அமுதமாகியவளே, மண்ணுலகத்து ஆசையை அறவே துறந்த பெரியோர்க்கு உரிய வாழ்வு தந்து ஆள்பவளே. எ.று.
அறிகருவி யைந்தனுள் தலையாயதாகலின் “கண்ணே” என்றும், அதற்குக் காணும் திறம் நல்குதலால் அதனிற் சிறக்குமாறு பற்றிக் “கண்ணின் மணியே” என்றும் பாராட்டி, கண்மணியில் திகழும் ஒளிக்கெலாம் தாயகமாய், ஏனை நாண்மீன் கோண்மீன் முதலாய ஒளிப் பொருளனைத்துக்கும் தாரகமாவது விண்ணகமாதலால், “மணியில் கலந்து ஒளிசெய் விண்ணே” என்று விதந்து விளம்புகின்றார். அண்ணல் - தலையாய சிவபிரான். வாமம் - இடப்பாகம். வீற்றிருத்தல் - வேறு எவர்க்குமில்லாத சிறப்புடன் இருத்தல். பெண்மைப் பொருள் அனைத்துக்கும் மேலாய பெண்மைப் பரம்பொருள் என்பது தோன்றப் “பெண்ணே” என்று புகழ்கின்றார். மலை - மலையரசன். மலை மணிகள் பிறக்குமிடமாகலின், ஆங்கு நீலமணிபோல் தோன்றி விளங்குதலால், அம்பிகையை, “மலைபெறும் பெண்மணியே” என வியந்து கூறுகின்றார். ஞானசத்தியாய் அமைவதின்றி, நுகர்தற்குரிய தெய்வப் பெண்ணுருவில் திகழ்வது விளங்கத் “தெய்வப் பெண்ணமுதே” என்றும், மண்ணக வாழ்வை விரும்பினோர்க்குப் பிறவித் தொடர்பு அறாதென்பது பற்றி “மண்ணேயம் நீத்தவர் வாழ்வே” என்றும் இயம்புகின்றார்.
இதன்கண், வடிவுடை மாணிக்கம் கண்ணும் கண்ணின் மணியும், மணியில் கலந்து ஒளிசெய் விண்ணும், ஒற்றியூர் அண்ணல் வாமத்திருக்கும் பெண்ணும், பெண்ணமுதும், மண்ணேயம் நீத்தவர் வாழ்வுமாய் அருளுகிறாள் என்பதாம். (7)
|