1393.

     மலையான் தவஞ்செய்து பெற்றமுத்
          தேஒற்றி வாழ்க்கைச்
     சிலையான் மணக்க மணக்குந்தெய்
          வீகத் திருமலரே
     அலையான் மலிகடல் பள்ளிகொண்
          டான்தொழும் ஆரமுதே
     வலையான் அருமை மகளே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      வடிவுடை மாணிக்கம் என்ற அம்பிகையே, நீ மலையரசன் தவம் செய்து பெற்ற முத்தும், திருவொற்றியூரில் வாழ்கின்ற பொன் மலையானான சிவன் மணந்து கொள்ளவே நன்மணம் கமழும் தெய்வத் தன்மையுற்ற திருமலரும், அலைகள் மிக்குள்ள கடலிற் பள்ளி கொண்டவனாகிய திருமால் தொழுது வணங்கும் அரிய அமுதமும், வலைஞர் கோன்பால் வளர்ந்த அருமை மகளுமாவாய். எ.று.

     மலையான் - மலையரசன். உமாதேவி தனக்கு மகளாய்ப் பிறக்க வேண்டுமென்று தவஞ்செய்ய, அவள் மகளாய் விளங்கிய வரலாறு கொண்டு, “மலையான் தவம் செய்து பெற்ற முத்தே” என்று மொழிகின்றார். கனகச் சிலை - பொன்மலை. பொன்மலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனாதலின், சிவனைக் “கனகச் சிலையான்” என்றும், அவர் தனக்கு மனைவியாக மணந்து கொண்டமையின், “மணக்க மணக்கும் தெய்வீகத் திருமலரே” என்றும் இயம்புகின்றார். சிவத்தினுடைய சிற்சத்தியாய்த் திருவருள் ஞானமணம் கமழ்வது பற்றி அம்பிகையை “மணக்கும் தெய்வீகத் திருமலர்” எனச் சிறப்பிக்கின்றார். அலைகடலிற் பள்ளி கொண்டவன் திருமால். “வலையான் அருமை மகள்” என்றது பாண்டிநாட்டுக் கடற்கரைப் பட்டின மொன்றில் வாழ்ந்த வலைஞர் தலைவன் மகளாய் வளர்ந்து, சிவபெருமான் வலைஞனாய்த் தோன்றி வலைவீசிக் குறும்பு செய்த சுறாமீனைப் பிடித்துத் தந்தது காரணமாகச் சிவனை மணந்துகொண்ட வரலாற்றைக் கருத்திற் கொண்டது என அறிக.

      இதனால், வடிவுடை மாணிக்கம் முத்தும், தெய்வீகத் திருமலரும், ஆரமுதும், வலையான் அருமை மகளுமாவள் என்பதாம்.

     (8)