1395.

     கோடா அருட்குணக் குன்றே
          சிவத்தில் குறிப்பிலரை
     நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர்
          நயக்கும் இன்பே
     பீடார் திருவொற்றிப் பெம்மான்
          இடஞ்செய் பெருந்தவமே
     வாடா மணிமலர்க் கொம்பே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      அம்பிகையான வடிவுடை மாணிக்கம், நெறி திறம்புதலில்லாத அருட் குணமாகிய குன்றும், சிவ பரம்பொருளின்பால் கருத்து இல்லாதவரை எண்ணுதல் இல்லாத ஆனந்தம் நல்கும் நட்புருவும், உண்மையன்புடையார் விரும்புகின்ற இன்ப வடிவும், பெருமை பொருந்திய திருவொற்றியூர்ப் பெருமானது இடப்பாகத்தேயிருந்து செய்யப்படும் பெருந்தவமும் ஆகியவள். எ.று.

     கோடுதல் - நெறி வழுவுதல். குணமே நிறைந்து சலியாது நிற்பது பற்றி, “குணக்குன்று” என்று கூறுகிறார். சிவத்தில் குறிப்பிலர் - சிவஞானத்தால் சிவயோக போகம் பெறுவதில் எண்ணமில்லாதவர். நட்பால் விளைவது இன்பமாதலால், “ஆனந்த நட்பு” என விளக்குகின்றார். மெய்யன்பர்கள் ஞானத்தையும், அஃது ஏதுவாக இன்பத்தையும் நயப்பது பற்றி, “மெய்யன்பர் நயக்கும் இன்பே” என இயம்புகின்றார். பீடு - பெருமை. சிவபெருமான் இடப்பாகத்திருந்து அம்பிகை தவம் செய்கின்ற சால்பை “பெம்மான் இடம் செய் பெருந்தவமே” எனப் புகல்கின்றார். மணிமலர் கொம்புக்கு வாடுதல் இல்லையாதல் தோன்ற “வாடா மணிமலர்க் கொம்பு” என உரைக்கின்றார்.

     இதனால், அம்பிகையான வடிவுடை மாணிக்கம், அருட்குணக்குன்றாய், ஆனந்த நட்புருவாய், அன்பர் நயக்கும் இன்ப வடிவாய், பெம்மான் இடம் செய் பெருந்தவமாம் விளங்குகின்றாள் என்பதாம்.

     (10)