1396.

     நாலே எனுமறை அந்தங்கள்
          இன்னமும் நாடியெனைப்
     போலே வருந்த வெளிஒளி
          யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
     பாலே இருந்த நினைத்தங்கை
          யாகப் பகரப்பெற்ற
     மாலே தவத்தில் பெரியோன்
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      அம்பிகையாகிய வடிவுடை மாணிக்கமே, நான்காகிய வேதங்களின் அந்தங்கள் உன்னைக் காணும் பொருட்டு இன்னமும் என்னைப்போல் வருந்த ஞானவெளியில் ஒளிப்பிழம்பாய்த் திகழ்கின்றாய். திருவொற்றியூரில் சிவபுண்ணியச் செல்வர் பக்கல் அருளுருவாய் நிலவும் நின்னைத் தனக்குத் தங்கையெனப் பேசப்பெறும் திருமால், தேவர்களில் தவத்தால் பெரியவனாவன் காண். எ.று.

     சகள நிலையில் அம்பிகை வடிவில் சிவபுண்ணியம் செய்யும் செல்வப் பெருமக்கட்கு ஞானமும் பொருளும் நல்குதற் பொருட்டுத் திருவொற்றியூரில் விளங்கும் திறத்தை, “ஒற்றிப் புண்ணியர் தம்பாலே இருந்த நினை” என்று புகழ்கின்றார். பௌராணிகர் உமாதேவியைத் திருமாலுக்குத் தங்கையாக வைத்துப் பரவுதலால், அதனை விதந்து, “நினைத் தங்கையாகப் பெற்ற மாலே தவத்திற் பெரியோன்” என்று பாராட்டுகின்றார். அகள நிலையில் வேதங்கள் நான்காய் விரிந்தும், சிவத்தின் அருளுருவாகிய அம்பிகையை உணர மாட்டாமையின், அந்தங்கள் என்ற பெயரால் உபநிடதங்கள் பல தோன்றி ஆராய்ந்து முடிந்த நிலை காணாவாயினமையின், “அந்தங்கள் இன்னமும் நாடி வருந்த” என்றும், அந்தங்களால் அறிய முடியவில்லை யாயினும், திருவருட் கண்கொண்டு காண்பார்க்குப் பரஞானவெளியில் ஒளி திகழும் பரையாய் காணப்படுவது புலப்பட, “வெளி ஒளியாய்” என்றும் இயம்புகின்றார். வெளி ஒளியாய், பரவெளியில் ஞானவொளியாய்ப் பரஞானிகள் காணத் தோன்றுகிறாய்.

     இதனால், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை, மறை யத்தங்கள் நாடி வருந்த வெளி ஒளியாய் விளங்குகிறாள்; இப்பெருமாட்டியைத் தங்கையாகப் பெற்ற திருமால் தவத்திற் பெரியோன் என்பதாம்.

     (11)